காமெடி நடிகர் வடிவேலு நடிப்பில் வெளியான இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தில் எதிரி நாட்டு மன்னன் ஓலை அனுப்பிய புறாவை வறுத்து தின்று விடுவார். இதனால் அந்நாட்டு மன்னர் படையுடன் வந்து வடிவேலு மீது போர் தொடுப்பார். அப்போது வடிவேலு ஒரு புறாவுக்கு போரா என கேட்பார். இது படத்தில் பார்க்க காமெடியாக இருந்தது.
ஆனால் நிஜத்தில் இதுபோல் ஒரு சீரியஸான சம்பவம் நடந்துள்ளது. ஆனால் இங்கு புறாவிற்கு பதில் ஒட்டகம். வடகிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் சூடான் நாட்டில், கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து உள்நாட்டு போர் நடந்து வருகிறது. எனவே அங்குள்ள பழங்குடியின மக்கள் தங்கள் சொந்த இடங்களிலிருந்து வெளியேறி வேறு இடங்களுக்கு தஞ்சம் புகுந்தனர்.
இந்நிலையில், தற்போது போர் பதற்றம் சற்று தணிந்திருப்பதால் அந்த மக்கள் மீண்டும் அவர்களின் சொந்த இடங்களுக்கு திரும்பி கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த மக்களின் இடங்கள் தற்போது வேறு நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விட்டது. இதனால் நில உரிமையாளர்களுக்கும் இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வருகிறது.
இந்நிலையில், சூடானில் உள்ள டாரப் மாகாணத்தின், ஜபல் மூன் பகுதியில் ஒட்டகத்தை திருடியதாக இரண்டு தரப்பினர் இடையே சண்டை நடந்துள்ளது. சண்டை பெரிதான நிலையில் அப்படியே மோதலாக மாறி கலவரமாக வெடித்துள்ளது. இந்த கலவரத்தில் சுமார் 25 நபர்கள் பலியாகியுள்ளனர்.
இதுதவிர மேற்கு டாரப் மாகாணத்தில் இருக்கும் பல இடங்களில் ஏற்பட்ட கலவரங்களில், மொத்தமாக 138 நபர்கள் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அப்பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.