பறிபோன குதிரை பந்தய மைதானம்.. ஊட்டி ரேஸ் கிளப் ஹைகோர்டில் அவசர முறையீடு.. நீதிமன்றம் உத்தரவு என்ன?

ஊட்டி: ஊட்டியில் உள்ள குதிரை பந்தய மைதானம் மீட்கப்பட்ட நடவடிக்கையில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக ரேஸ் கிளப் நிர்வாகம் தெரிவித்த போதும், 820 கோடி குத்தகை தொகை செலுத்தாமல் உள்ளதாக தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்தே நீதிமன்றம் தலையிட மறுத்துவிட்டது

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வருவாய்துறைக்கு சொந்தமான 52.34 ஏக்கர் நிலத்தை 1977-ஆம் ஆண்டு முதல் மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் குத்தகைக்கு எடுத்து குதிரை பந்தயம் மைதானமாக பயன்படுத்தி வந்தது. ஊட்டியில் இந்த ரேஸ் கிளப் மிகவும் பிரபலம் ஆகும்.

தொடக்கத்தில் முறையாக குத்தகை செலுத்தி வந்த ரேஸ் கிளப் நிர்வாகம் பின்னர் குத்தகை தொகை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2001- ஆம் ஆண்டு முதல் குத்தகை தொகை செலுத்தாமல் இருந்து வந்துள்ளது. கடந்த 23 ஆண்டுகளில் ரேஸ் கிளப் நிர்வாகம் 820 கோடி குத்தகை தொகை செலுத்தாமல் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு குதிரை பந்தயம் மைதானத்தை மீட்க உயர்நீமன்றம் உத்தரவிட்டது. ஆனால் ஊட்டி ரேஸ் கிளப் நிர்வாகம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தலைமையிலான அமர்வு, ரேஸ் கிளப் சார்பாக தாக்கல் செய்யபட்டிருந்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதனையடுத்து இன்று காலை உதகை கோட்டாட்சியர் தலைமையிலான வருவாய் துறையினர் குதிரை பந்தயம் மைதானத்தை அதிரடியாக மீட்டனர். அங்கு அரசுக்கு சொந்தமான நிலம் என அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு, தோட்டக்கலைத் துறைக்கு அந்த நிலத்தை ஒப்படைத்தார்கள். அங்கு பூங்கா அமைக்கும் பணி உடனடியாக தொடங்கி உள்ளது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ஊட்டி ரேஸ் கிளப் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம் மற்றும் என்.செந்தில்குமார் அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை காலை அவசர முறையீடு செய்தது. அந்த மனுவில் கையகப்படுத்திய நடவடிக்கை தடை விதிக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகவும் கூறியது.

இதற்கு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார் . 820 கோடி ரூபாய் வரை குத்தகை நிலுவையில் உள்ள நிலையில் அரசின் நடவடிக்கையில் தலையிடக்கூடாது என்றும், நிலம் கைய படுத்தப்பட்டு விட்டதாகவும் சுட்டிக்காட்டினார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரேஸ்கிளப் நிர்வாகத்தின் முறையீட்டை நிராகரித்தனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews