வெயிலால் பாதிக்கப்படாமல் இருக்க பூக்களால் அபிஷேகம் செய்யப்படும் உறையூர் வெக்காளியம்மன்!

அம்மன் என்றாலே குறிப்பாக பெண்கள் பக்திப் பரவசமாகி விடுவார்கள். எங்கு ஒரு திருவிழா நடந்தாலும் அங்கு அம்மன் அருள் பெற்று சாமியாடத் தொடங்கி விடுவர். அருள்வாக்கு சொல்வதிலும் இவர்களை மிஞ்ச ஆள் இல்லை. உக்கிரமான தெய்வம் காளி. இங்கு நாம் வெக்காளியம்மனைப் பற்றிப் பார்க்கலாம். இது சிந்தலக்கரை வெக்காளியம்மன் அல்ல. திருச்சி அருகில் உள்ள உறையூர் வெக்காளியம்மன்.

Tiruchi Uraiyur vekkali Amman Koil
Tiruchi Uraiyur vekkali Amman Koil

சோழன் நெடுங்கிள்ளியின் மகன் பெருநற்கிள்ளி, உறையூரில், நங்கைக்கு பத்தினிக் கோட்டம் சமைத்து நாள்தோறும் விழாவெடுத்து, அலங்காரம் நிகழ்த்தி வந்தான் என்று சிலப்பதிகார காவியத்தின் வரலாற்றுச் செய்தி மூலம் தெரியவருகிறது.

இந்த பத்தினி கோட்டத்தில் எழுந்தருளச் செய்த கண்ணகி வழிபாடுதான், காலப்போக்கில் வெக்காளியாக பெயர் மருவி வந்துள்ளதாகத் தெரிகிறது.

மன்னர் அலட்சியம்

திருச்சிராப்பள்ளியில் உள்ள மலைக்கோட்டையில் தாயுமான சுவாமிகள் கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள் செய்கிறார். மலைக்கோட்டைக்கு மேற்கே உள்ளது உறையூர். அங்கு வன்பராந்தகன் ஆட்சி செய்த காலம். அப்போது சாரமா முனிவர் நந்தவனம் அமைத்து பல மலர்ச்செடிகளை பயிர் செய்து வந்தார். அங்குள்ள பூக்களை தினமும் தாயுமான சுவாமிகளுக்கு அணிவித்து வந்தார்.

பிராந்தகன் என்னும் பூ வணிகன் நந்தவனத்துப் பூக்களை அரசனுக்கு அளிக்கத் தொடங்கினான். நந்தவனத்தில் மலர்கள் குறைவதன் காரணத்தை சாரமா முனிவர் கண்டுபிடித்தார். பிறகு மன்னரிடம் முறையிட்டார். ஆனால் மன்னர் முனிவரை அலட்சியம் செய்தார்;.

தஞ்சம் புகுந்த மக்கள்

பின்னர், முனிவர் தாயுமான சுவாமிகளிடம் முறையிட்டார். தன் அடியவருக்கு செய்யப்பட்ட இடரைத் தாங்காமல், தாயுமான சுவாமிகள் மேற்கு முகமாகத் திரும்பி உறையூரை நோக்கினார்.

அப்போது, மண் மாரி பொழியத் தொடங்கியது. ஊரிலிருந்த அனைத்து உயிரினங்களும் தப்பி ஓடிப்பியோடிப் பிழைக்க வழி தேட முற்பட்டன. உறையூரை மண் மூடியது. மக்கள் தங்களைக் காத்துக்கொள்ள தங்களின் காவல் தெய்வமான வெக்காளியம்மனை விட்டால் வேறு வழி இல்லை என்று தஞ்சம் புகுந்தனர்.

வெக்காளியம்மன் தாயுமானவ சுவாமிகளை வேண்டினாள். அதற்குப்பிறகு, மண் மாரி நின்றது. ஆனால் மக்கள் வீடிழந்து வெட்ட வெளியில் தங்கும் நிலை உருவானது. மக்களின் துயர் கண்டு அன்னை வெக்காளி, ஊர் மக்கள் அனைவருக்கும் வீடு கிடைக்கும் வரை, நானும் உங்களைப்போல வெட்ட வெளியிலேயே இருப்பேன் என்று அருள் வாக்கு கூறினாள்.

Vekkaliyamman
Vekkaliyamman

ஆகவே அன்னை வெக்காளி, இன்றும் வானமே கூரையாக வெட்ட வெளியில் இருந்து, காற்று, மழை, வெய்யில் இவைகளைத் தாங்கிக் கொண்டு மக்களுக்கு அருள் செய்து வருகிறாள். இந்தக் கதை உணர்த்தும் உண்மை என்னவென்றால் அனைவருக்கும் வீடு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தாயாக வெட்டவெளியில் அமர்ந்து உள்ளார் பல ஆயிரம் வருடங்களாக…

மக்கள் அனைவருக்கும் வீடு கிடைக்கவில்லை…அதனால் அம்மனும் வெயிலில் அமர்ந்துள்ளார்கள்.

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா குறித்து, கோவில் அர்ச்சகர் ஒருவர் கூறுகையில், பங்குனி மாதத்தில் அம்மனுக்கு இந்த விழா மிகப் பிரசித்தி பெற்றது. உலக நன்மைக்காகவும், நாடு செழிக்கவும், வெயிலால் அம்மன் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பூக்களைக் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது என்றார்.

இன்று (17.03.2023) உறையூர் காவல் தெய்வம் வெக்காளி அம்மனுக்குப் பூச்சொரிதல் விழா

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews