இரட்டை இலையை விட்டுப் பிரிந்த தாமரை; தனித்துப் போட்டி-தமிழ்நாட்டில் தாமரை மலருமா?
கடந்த 5 நாட்களாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் பரபரப்பு நிகழ்ந்து கொண்டு காணப்படுகிறது. அதுவும் குறிப்பாக கடந்த ஓரிரு நாட்களாக அனைத்துக் கட்சிகளும் கூட்டணி கட்சிகளும் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வந்தது.
குறிப்பாக அதிமுகவும் பாஜகவும் இடையே பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பாஜகவுக்கு சொற்ப இடங்களையே ஒதுக்குவதாக கூறி பேச்சுவார்த்தை நடந்தது. இதனால் பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியாக இருந்தது. இன்று காலை அதிமுக-பாஜக பேச்சுவார்த்தைக்கு அழைத்த நிலையில் திடீரென்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலம் பயணம் மேற்கொண்டார்.
நடக்க இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக செய்திகள் பரவிய நிலையில் அதனை உறுதி செய்யும் விதமாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் மத்தியில் பேட்டியளித்துள்ளார்.
அதன்படி நடக்க இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி தனித்து போட்டியிடும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியை முன்னெடுத்தோம் என்றும் கூறினார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாகவும் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினோம் என்றும் கூறினார். தமிழ்நாட்டில் பாஜக வேகமாக வளர்ந்து வரும் கட்சியாக இருக்கிறது என்று செய்தியாளர்கள் மத்தியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
இருப்பினும் இந்த பேச்சுவார்த்தை எட்டப்படாத நிலையில் பாஜக வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
