உங்க குழந்தைக்கு பேச்சு குறைபாடா?! சிம்மக்கல் பெரியாச்சியம்மன் கோவிலுக்கு வாங்க!-அறிவோம் ஆலயம்


அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது… மானிடர் ஆயினும் கூன், குருடு, செவிடு, பேடு நீங்கி பிறத்தல் அரிது.. என அவ்வையார் பாடி வைத்துள்ளார். ஒவ்வொரு தம்பதியருக்கும் தனக்கு பிறக்கும் குழந்தை பூரண ஆரோக்கியத்துடன் பிறக்க வேண்டுமென்பதே வேண்டுதலாக இருக்கும். உடல் ஆரோக்கியத்துடன் பிறக்கும் குழந்தை 11ம் மாதம் பேச ஆரம்பித்துவிடும். சில குழந்தைகள் இரு வயதானாலும் அம்மா, அப்பா, மாதிரியான சில வார்த்தைகள் மட்டுமே பேசும். அந்த மாதிரி குழந்தைகள் மற்ற குழந்தைகள்போல் பேச பெரியாச்சியம்மன் துணை நிற்கிறாள். இவள் பேச்சுக்கு மட்டுமல்ல கல்விச்செல்வத்தையும் வாரி வழங்குகிறாள்.

பலருக்கு குலதெய்வமாகவும் பெரியாச்சியம்மன் இருக்கிறாள். அவ்வாறு பெரியாச்சியம்மனை குலதெய்வமாக கொண்ட மக்கள் தாங்கள் இடம்பெயரும் இடங்களில் அவளுக்கு கோவில் எழுப்பினர். தமிழகத்தில் பல இடங்களில் பெரியாச்சியம்மனுக்கு கோவில் உண்டு. மதுரைக்கருகில் சிம்மக்கல் என்ற இடத்தில் அருள்புரியும் பெரியாச்சியம்மன் கோவிலை பற்றிதான் அறிவோம் ஆலயம் பகுதியில் பார்க்கப்போகின்றோம்.

பெரியாச்சியம்மனின் தலவரலாறக இருவேறு கதைகள் சொல்லப்படுகிறது. இரண்டுமே செவிவழி செய்திதான்..

பெரியாச்சியம்மன் வரலாறு :1

சிம்மக்கல் பகுதியில் சிறுவன் ஒருவன் குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்றுவிட்டான். அவ்வாறு பிரிந்து சென்ற சிறுவன் சொந்த ஊரிலிருந்து தூரத்தில் இருக்கும் ஒரு ஊரில் வாழ்ந்து வந்தான். அவ்வாறு வாழ்ந்த அவன், அந்த ஊரில் இருந்த பேச்சி என்ற தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துக்கொண்டான். இதனால் அவனுக்கு ஊரில் எதிர்ப்பு கிளம்பவே, அந்த ஊரைவிட்டு விலகி காட்டில் குடிசை போட்டு வாழ்ந்து வந்தனர்.

சிறுவயதில் பிரிந்து சென்ற சிறுவன் வளர்ந்து திருமணமாகி, காட்டில் குடிசை போட்டு வாழ்ந்துவரும் விவரம் அறிந்து அவனைத்தேடி குடும்பத்தார் வந்தனர். வந்தவர்கள் பேச்சி தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்தவள் என்றும், அவள் தற்போது நிறைமாத கர்ப்பிணி என்பதை அறிந்து அவளை விட்டு, அவனை மட்டும் தங்களோடு வரச்சொல்லி வற்புறுத்தினர். அவன் மறுக்கவே கோபங்கொண்டு கர்ப்பிணி என்றும் பாராமல் பேச்சியை குடிசையோடு தீவைத்தனர். மனைவியை காப்பாற்ற சென்ற அவனும் தீயில் கருகி இறந்தனர்.

தன்னோடு சேர்த்து தன் கருவையும், கணவனையும் கொன்றவர்களின் குலத்தையும், ஊருக்குள் வாழவிடாத தனது பிறந்த ஊரையும் அழிப்பதாக பேச்சி சபதம் கொண்டு பேச்சி கணவரின் குடும்பத்தாரையும் ஊர்க்காரரையும் ஒவ்வொருவராய் பழிதீர்த்து வந்தாள்.. இதனால் பீதியடைந்த கணவனின்அங்காளி பங்காளிகளும், ஊர்க்காரர்களும் ஒன்று சேர்ந்து தங்களை காத்துக்கொள்ள, குறி சொல்லும் ஆட்களின் மூலம் பேச்சியின் ஆவியை வரவழைத்து அவளிடம் மன்னிப்பு கேட்டு, கோவம் தணிந்து தங்களை வாழவிடுமாறு வேண்டி, அவளுக்கு ஒரு கோவிலை எழுப்பி அவளை குலதெய்வமாய் வழிபட துவங்கினர்.

88bbc6dbf5abebb18b78c26eebc6d3f5

பேச்சியம்மன் வரலாறு 2

மூன்றாம் ராஜ நாராயண சம்புவரையரின் மகன் வல்லாளன். இவன் போரில் நாடிழந்து காட்டில் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டான். அங்கே உணவு கிடைக்காததால், அருகிலிருந்த ஊரைக் கொள்ளை அடித்து வாழ்ந்தான். இதனால் ஊர் மக்கள் அவதிப்பட்டு, அங்கிருந்த ஒரு முனிவரிடம் அழுதனர். சினத்தில் அந்த முனிவர், “நீ கொள்ளை அடிப்பதற்கு தண்டனையாக, உன் மகனின் உடல் நிலத்தில் பட்டதும் மரணிப்பாய்” எனச் சாபமிட்டார். அந்நேரத்தில் அவன் மனைவி கார்குழலிக்கு பிரசவ நேரம். ஊரின் அருகே இருந்த ஒரு வயதான மருத்துவச்சியை, மனைவிக்கு பிரசவம் பார்க்க அழைத்து வந்தான் வல்லாளன். அவளிடம், குழந்தை நிலத்தில் விழாமல் தாங்கிப்பிடித்து தன்னிடம் கொடுத்தால் உனக்கு நிறைய பொன்னும் பொருளும் தருவதாக மருத்துவச்சியிடம் கூறினான்.

அவள் குழந்தையை நிலத்தில் விழுந்ததும் தாங்கிப்பிடித்து வல்லாளனிடம் கொடுத்தாள். வல்லாளன் அக்குழந்தையைக் கொல்ல முற்பட்டான். அக்குழந்தை பிறந்த நேரத்தைக் கணக்கிட்ட பெரியாச்சி, வல்லாளனும், அவன் மனைவியும்ன் ஊருக்கு துரோகம் செய்பவர்கள் என்றும், இக்குழந்தை வாழ வேண்டிய குழந்தை என்றும் அறிந்து கொண்டாள். அதனால், சினம் கொண்டு, வல்லாளனையும் அவனுக்குத் துணை போன கார்குழலியையும் அழித்தாள். அவளது ரௌத்திர சப்தமும் வல்லாளன் மற்றும் அவன் மனைவியின் அலறல் சப்தமும் கேட்டு, ஊர் மக்கள் திரண்டு ஓடி வந்தனர். அங்கே பெரியாச்சி ரௌத்திரம் அடங்காது இருந்ததைக் கண்டு, அவளை மஞ்சள் நீரால் குளிர்வித்து, பாலை அருந்தக் கொடுத்து ஆசுவாசம் செய்தனர். அதன்பின் அம்மருத்துவச்சியை ஊரிடர் அழித்த தாயாகப் போற்றியவர்கள், அவள் இறந்ததும், அவளையே பெரியாச்சி அம்மனாக்கி தங்கள் ஊர் காக்க வேண்டிய தெய்வம் ஆக்கினர். காலப்போக்கில் அவளுக்கு பேச்சியம்மன், பெரியாயி அம்மன் என்ற மற்ற பெயர்களும் உண்டாண்டது.

அந்த ஊர் மக்கள் சென்ற இடங்களில் எல்லாம் பேச்சியம்மனுக்கு கோவில் எழுப்பினர். மதுரை நகரின் சிம்மக்கல் பகுதியில் பேச்சியம்ம்மனுக்கு ஒரு கோவில் உண்டு, கருவறையில் இருக்கும் பேச்சியம்மன் சுயம்புவாய் உருவானவள். பேச்சியம்மனின் வலதுக்கரம் ஓங்கியதும், இடது கையில் குழந்தையுடனும், காலில் அரக்கனை மிதித்து இருப்பது போன்றும் இருக்கிறது. இந்தப் பேச்சியம்மனைச் சரஸ்வதி, காளியம்மனின் அம்சம் என்றும் மக்கள் நம்புகின்றனர் . இந்த ஆலயம் எழுநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த ஆலயத்தில் விநாயகர், முருகன், மீனாட்சி சுந்தரேஸ்வரர், மகாலட்சுமி, சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி, காளி, துர்க்கை, தத்தாத்ரேயர், ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள், கருப்பசாமி, இருளப்பசாமி, அய்யனார், வீரமலை, பெரியண்ணன், சின்னண்ணன், சப்த கன்னியர், நாகர் உள்பட 21 தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.

இக்கோவிலின் தல விருட்சமான ஆல மரமும் வேப்ப மரமும் ஒன்றாக வளர்ந்துள்ளது தனிச்சிறப்பு ஆகும். அதற்குகீழ் உள்ள நாகர் சிலைக்கும், கோவிலில் இருக்கும் துர்க்கை அம்மனுக்கும் ராகு காலத்தில் பூஜிப்போருக்கு ராகு-கேது தோசம் நீங்கும்.

பேச்சியம்மனுக்கு தினமும் அபிஷேக ஆராதனை செய்தாலும் பிரதி வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு அம்மனுக்குப் பாலாபிஷேகம் செய்து, சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்க்கு செய்விக்கப்படும் குங்கும அலங்காரத்தை காண பக்தர் கூட்டம் கூடும் இது தவிர, நவராத்திரி நாட்களில் அம்மனுக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மதுரையின் நடுப்பகுதியில் சிம்மக்கல் பகுதியில் இருக்கும் வைகையாற்றின் கரையோரத்தில் பேச்சியம்மன் ஆலயம் உள்ளது. பல நகரப் பேருந்துகள் சிம்மக்கல் பகுதி வழியாகத்தான் செல்கின்றது.

.இக்கோவில் காலை 6 மணி முதல் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் 9 மணி வரை திறந்திருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.