மகளிர் ப்ரீமியர் லீக், ஐபிஎல்.. இந்த ஆண்டு நடந்த இரண்டு ஃபைனலிலும் இருந்த அடேங்கப்பா ஒற்றுமை..

ஐபிஎல் தொடர் கடந்த 17 ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெற்று வரும் அதே வேளையில், இதன் வெற்றியின் காரணமாக மகளிருக்கான பிரிமியர் லீக் தொடரும் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆரம்பமாகியிருந்தது. இதன் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு நடந்து முடிந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பெங்களூர் அணி வெற்றி கண்டிருந்தது.

17 ஐபிஎல் சீசன்களில் ஒரு முறை கூட ஆர்சிபி அணி கோப்பையை கைப்பற்றாத நிலையில், இரண்டாவது சீசனிலேயே ஆர்சிபி மகளிர் அணி கோப்பையை கைப்பற்றி இருந்தது அந்த அணியின் ரசிகர்களுக்கு அதிக உற்சாகத்தையும் கொடுத்திருந்தது. மகளிர் பிரிமியர் லீக் முடிவடைந்த நிலையில் தற்போது ஐபிஎல் தொடரும் முடிவுக்கு வந்துள்ளது.

கம்பீர் ஆலோசகராக கொல்கத்தாவில் இணைந்தது மிகப்பெரிய உத்வேகத்தை கொடுத்திருந்த சூழலில் அதனை இறுதிப்போட்டி வரைக்கும் கொண்டு வந்து கோப்பையை வென்று அசத்தி உள்ளனர். பல அணிகளுக்கும் லீக் தொடரில் சிம்ம சொப்பனமாக விளங்கி இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பிளே ஆப் போட்டியிலும் குவாலிஃபயர் 1-ல் ஹைதராபாத் அணியை கதற விட்டிருந்தது.

லீக் போட்டிகளில் 250 ரன்களை பல முறை எடுத்து அதிரடி பேட்டிங் லைன்அப்புடன் விளங்கிய ஹைதராபாத் அணியாலும் ஒன்றும் செய்ய முடியாமல் போனது. இறுதி போட்டியில் 113 ரன்களில் ஹைதராபாத் அணி ஆல் அவுட்டாக, ஐபிஎல் தொடரின் ஃபைனலில் அடிக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர் ஆகவும் இது பதிவானது.

தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணி, எளிதாக வெற்றி பெற்று ஐபிஎல் கோப்பையை சொந்தமாக்க, கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டிக்கும், மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதி போட்டிக்கும் உள்ள ஒற்றுமையை பற்றி தற்போது காணலாம்.

மகளிர் பிரிமியர் லீக் இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதேபோல அவர்களை எதிர்த்து ஆடிய டெல்லி அணி 18.3 ஓவர்களில் 113 ரன்கள் எடுத்திருந்தது. இதே போலத்தான் ஐபிஎல் இறுதிப் போட்டியிலும் கொல்கத்தா அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, ஹைதராபாத் அணி 18.3 ஓவர்களில் 113 ரன்கள் சேர்த்து இருந்தது.

இதேபோல இரண்டு இறுதி போட்டிகளிலும் தோற்ற கேப்டன்களுக்கும் ஒரு சரியான ஒற்றுமை உள்ளது. இரண்டு பேரும் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள். அது போக, மகளிர் பிரீமியர் லீக் இறுதி போட்டியில் 2 வது இடம் பிடித்த டெல்லி அணியின் கேப்டன் மெக் லென்னிங், இரண்டு முறை இந்தியாவுக்கு எதிராக ஐசிசி டிராபியை வென்றுள்ளார்.

அதேபோல ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸும் இந்தியாவுக்கு எதிராக இரண்டு முறை ஐசிசி கோப்பையை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...