மே தினத்தை ஒட்டி தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என சேலம் மெய்யனூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பாக மே தின கொடியை ஏற்றி வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மே தின விழா இன்று தமிழகத்தில் தொழிலாளர்கள் மத்தியில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சேலத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மெய்யனூர் கிளை பணிமனை முன்பாக தொமுச சார்பில் நடைபெற்ற மே தின விழா கொண்டாட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, தொமுச கொடியை கொடியை ஏற்றி வைத்து பேசினார்.
அப்போது, மே தினத்தை முன்னிட்டு திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கியது முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் தான் என்றும், 2006 முதல் 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் 36 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் அமைக்கப்பட்டதும் கருணாநிதி ஆட்சியில்தான்.
விவசாயக் தொழிலாளர்களுக்கு வீடு வழங்கியது, இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழகத்தில் கை ரிக்ஷாவை ஒழித்து கட்டியது, சங்கம் இல்லாமல் செயல்பட்ட தொழிலாளர்களுக்கு நேரடியாக அரசு திட்டங்களை வழங்கியது, தனியார் ஊழியர்களுக்கும் அரசு ஊழியர்களை போல பணிக்கொடை வழங்கிய திட்டம் , தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீடு, மே தின நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 1990 ஆம் ஆண்டு சென்னை நேப்பியர் பூங்காவிற்கு மே தின பூங்கா என்று பெயர் சூட்டி அங்கு மே தின நினைவுச் சின்னத்தை அமைத்தது என தொழிலாளர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொடுத்தவர் முத்தமிழ் கலைஞர் தொடங்கி வைத்ததாக சுட்டிக்காட்டினார்.
இதில் இன்னும் கூடுதல் சிறப்பு என்னவென்றால் மே தின பூங்கா அமைத்து இருப்பது சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியான என் தொகுதியில் தான். ஆண்டுதோறும் மே தினவிழாவில் தலைவருடன் சென்று பங்கேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறேன். இந்த ஆண்டு சேலத்தில் உள்ள உங்களுடன் மே தின விழா கொண்டாடுவது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது எனக்கூறினார்.