தொழிலதிபர் வீட்டை ஜப்தி செய்ய சென்ற வங்கி அதிகாரிகளுக்கு கிடைத்த பேரதிர்ச்சி; சென்னையில் பரபரப்பு!

அண்ணாநகரில் தொழிலதிபர் வீட்டில் இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் 12 குண்டுகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை அண்ணா நகர் 5வது அவென்யூ தெருவில் வசித்து வரும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தம்பதி சஞ்சய் குப்தா மற்றும் வினிதா குப்தா. இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். அண்ணா நகர் ரவுண்டானா அருகே வீட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றனர். இவர்கள் தொழில் மேம்பாட்டிற்காக கடந்த 2015ஆம் ஆண்டு அண்ணாநகர் பேங்க் ஆப் இந்தியா கிளையில் தாங்கள் வசித்து வரும் வீட்டை அடமானம் வைத்து, வினிதா குப்தா பெயரில் 75 லட்சம் ரூபாயை வர்த்தக கடனாக பெற்றுள்ளனர். கடன் வாங்கிய நாள் முதலே சரிவர வட்டி செலுத்தாமல் சஞ்சய் குப்தா தம்பதியினர் இருந்து வந்துள்ளனர்.

பல முறை வங்கி நிர்வாகம் எச்சரித்தும் தொடர்ந்து வட்டி செலுத்தாமல் இருந்ததால், 1கோடிக்கு மேல் கடன் சென்றதால், சஞ்சய் குப்தா அடமானமாக வைத்த அண்ணா நகர் வீட்டை ஜப்தி செய்வதற்கான நடவடிக்கையில் வங்கி நிர்வாகம் ஈடுபட்டனர். கடந்தாண்டு அக்டோபர் மாதம் எழும்பூர் நீதிமன்றத்தில் ஜப்தி செய்வதற்கான உத்தரவை பெற்று வங்கி அதிகாரிகள் வீட்டை பூட்டி நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்.

இந்நிலையில் இன்று பேங்க் ஆப் இந்தியா வங்கியின் கடன் வசூலிக்கும் நிறுவனம், ஜப்தி செய்யப்பட்டுள்ள அண்ணா நகரில் உள்ள வீட்டில் பொருட்களை பறிமுதல் செய்து விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வீட்டின் அறையில் 12 குண்டுகளுடன் கூடிய இரண்டு கைத்துப்பாக்கிகள் இருப்பதை கண்ட வங்கி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் உடனடியாக இதுகுறித்து அண்ணா நகர் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இரண்டு கைத்துப்பாக்கி மற்றும் 12 குண்டுகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கைத்துப்பாக்கிகளை கைப்பற்றிய போலீசார் ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தொடர்ந்து சஞ்சய் குப்தா தம்பதியினர் தலைமறைவாக இருப்பதால், செல்போன் எண்களை வைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் வங்கியில் கடன் வாங்கிய தொகையை விட வீட்டின் மதிப்பு குறைவாக இருப்பதால், மேலும் 20லட்சம் ரூபாய் வங்கிக்கு சஞ்சய் குப்தா கடனாக தரவேண்டியுள்ளதாக வங்கி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஜப்தி செய்ய சென்ற வீட்டில் கைத்துப்பாக்கி மற்றும் குண்டுகள் கிடந்த சம்பவம் அப்பகுதிவாசியிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.