மீஞ்சூர் அருகே தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் தனியார் (இம்மானுவேல்) மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. கோடை விடுமுறை தொடங்கிய நிலையில் தனியார் பள்ளியில் கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்துவதற்காக துப்புரவு பணியாளர்கள் இன்று வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
மீஞ்சூர் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளரான கோவிந்தன் மற்றும் ஒப்பந்த தொழிலாளர் சுப்புராயலு ஆகிய இருவர் தனியார் பள்ளியில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்தும் பணிக்காக தொட்டியின் மூடியை திறந்து உள்ளே இறங்கியதாக கூறப்படுகிறது. இருவரும் மயங்கி நீண்ட நேரம் வெளியே வராதால் மீஞ்சூர் காவல்துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்து வடசென்னை அனல் மின் நிலைய தீயணைப்பு வீரர்கள் கழிவு நீர் தொட்டியில் மயங்கிய நிலையில் இருந்த துப்புரவு தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். குறுகிய இடத்தில் இருந்த கழிவறை கட்டிடம் ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டு கழிவுநீர் தொட்டியின் பக்கவாட்டு சுவர் இடித்து அகற்றப்பட்டது.
தொடர்ந்து கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு வெளியேற வழி ஏற்படுத்தப்பட்டது இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் கழிவுநீர் தொட்டியில் இறங்கி மயங்கிய நிலையில் இருந்த தொழிலாளர்களை ஒருவர் பின் ஒருவரக கயிறு கட்டி மேலே சடலமாக மீட்டனர்.
தொடர்ந்து இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்ந்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தனயார் பள்ளி தாளாளர் சிமியோன் விக்டரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மே தினமான இன்று தொழிலாளர்களை கொண்டாடி வரும் நிலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்ற 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை விடுத்து இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வரும் நிலையில் இனிவரும் காலங்களில் உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.