தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மத்தியில் ஏப்ரல் 1 (இன்று) முதல் தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
மணல் லாரிகள், டேங்கர் லாரிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து லாரிகள் உள்ளிட்ட சங்கங்கள் சுங்கக் கட்டணத்தை 5% லிருந்து 10% ஆக உயர்த்தியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன.சுங்கக் கட்டண உயர்வால், லாரி, வேன், சரக்கு வாகனங்களின் வாடகை உயர்ந்துள்ளதாக, உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது.
மேலும், டீசல் மற்றும் இன்சூரன்ஸ் விலை உயர்வால் லாரி தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும் லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தினர்.
நாடு முழுவதும் உள்ள 460 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் 29 சுங்கச்சாவடிகள் உள்ளன. 15 சுங்கச்சாவடிகளில், இன்று முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது, மீதமுள்ள 14 சுங்கச்சாவடிகளில், கட்டண உயர்வு செப்டம்பர் முதல் அமலுக்கு வருகிறது.நெடுஞ்சாலைத்துறையில் , சலுகை ஒப்பந்தத்தின்படி கட்டண உயர்வு ஆண்டுதோறும் அமலுக்கு வருகிறது.
தேசிய நெடுஞ்சாலைக் கட்டணம் (விகிதங்கள் மற்றும் வசூல் நிர்ணயம்) விதிகள், 2008ன் படி மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டது.
கட்டண உயர்வு, 5 ரூபாய் முதல், 55 ரூபாய் வரை இருக்கும்.சென்னையை பொறுத்தவரை, பரனூர், வானகரம், சூரப்பட்டு, செங்குன்றம், பட்டறை, பெரும்புதூர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் அதிகரித்து வருகிறது.
சென்னையில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, மதுரை, கோயம்புத்தூர் போன்ற இடங்களுக்கு காரில் செல்லும்போது கூடுதல் செலவு ஏற்படும். இந்த கட்டண உயர்வு இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது.