அரசு ஊழியர்கள் ரெடியா இருங்க.. ஒரே இடத்தில் 3 ஆண்டு வேலையா.. உடனே வரப்போகுது டிரான்ஸ்பர்

சென்னை: பள்ளிக்கல்வித்துறை 3 வருடத்துக்கு மேல், ஒரே இடத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களை கட்டாய இடமாறுதல் செய்வதற்காக கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்துள்ளது. எனவே தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அனைத்துவகைப் பணியாளர்களை பணியிடமாறுதல் செய்யப்பட உள்ளார்கள்.

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேநேரம் பள்ளிக்கல்வித்துறையில் தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அனைத்து வகை பணியாளர்களையும் பணியிட மாறுதல் செய்ய பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதன்படி நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்ட கண்காணிப்பாளர், உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் போன்ற பணிகளில் மூன்று ஆண்டுகளாக உள்ளவர்களின் தகவல்களை ஜூலை 5ம் தேதிக்குள் பள்ளி கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையின் விவரம் வருமாறு: பள்ளிக்கல்வித் துறையில் அனைத்துவித இயக்குநரகங்கள், அலுவலகங்களின் நிர்வாகம் திறம்பட செயல்பட வேண்டியது அவசியம் ஆகும். அதில் பணிபுரியும் பணியாளர்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில், பணியிடத்தில் இல்லாமல் அவர்களை மாறுதல் செய்யவும், விருப்ப மாறுதல் ஆண்டுதோறும் நடத்தவும் தமிழக அரசால் உத்தரவிடப்பட்டு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டு உள்ளது.

இதன்படி பள்ளிக்கல்வி அலுவலகங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம், இயக்குநரகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் கடந்த ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி 3 ஆண்டுகளுக்கு மேல் நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உட்பட பணியிடங்களில் வேலை செய்பவர்களின் பட்டியலை கணக்கெடுக்க வேண்டும்.

அந்த விவரங்களை பட்டியலாக தயாரித்து ஜூலை 5ம் தேதி (நாளை) மாலை 5 மணிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். எந்த விவரங்களும் விடுபடாமல் முழுமையான வகையில் அறிக்கையை சமர்பிக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது” இவ்வாறு பள்ளி கல்வித்துறை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews