இறந்த மகளை 10கிமீ வரை தோளில் சுமந்து சென்ற அவலம் : சட்டீஸ்கரில் பரிதாபம் !!!
சட்டீஸ்கர் சுர்குஜா மாவட்டம் ஆம்தாலா கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வர் தாஸ். இவரது 7 வயது மகள் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் லகம்பூரியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது மகளுக்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. இதனால் சிகிச்சைக்கு பயன்படும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் உயிரிழந்து விட்டதாக அங்கு பணியாற்றிய டாக்டர் வினோத் பார்கவ் கூறியுள்ளார். இந்நிலையில் உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் உதவியை நாடினார்.
ஆனால் அங்கு இருந்தவர்கள் மற்றோரு சடலம் வருவதாக கூறி அவரை காத்திருக்க வைத்துள்ளனர். இதனிடையே இறந்த மகளின் சடலத்தை ஈஸ்வர் தாஸ் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் தனது வீட்டிற்கு தோளில் சுமந்தபடி சென்றுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டு தீயாய் பரவியது. இது குறித்து அறிந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டிஎஸ் சிங் தியோ, ஈஸ்வர் தாஸிற்கு மருத்துவ ஊழியர்கள் உதவ முன்வராதது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மகளின் சடலத்தை தோளில் சுமந்தபடி செல்லும் தந்தையின் வீடியோவை பார்த்தேன். மிகவும் வருத்தத்தை அளிக்க கூடியதாக இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என கூறினார்.
