தமிழகத்தில் கன மழை தொடர்ந்து வருவதை அடுத்து கடந்த சில நாட்களாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில் நாளை மூன்று மாவட்டங்களுக்கு விடுமுறை என மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது என்றும் இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி விட்டதாகவும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து வெள்ள அபாய எச்சரிக்கையும் சில பகுதிகளில் விடுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தோன்றியுள்ளதால் தமிழகத்தில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே கனமழை காரணமாக காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு இன்று இரவு அல்லது நாளை காலை வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்னும் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழை வரை இருப்பதாகவும் சென்னையை பொருத்தவரை ஒரு சில இடங்களில் மிதமான மழையும் சில இடங்களில் கன மழையும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.