ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை – கட்டுப்பாடுகள் என்னென்ன?

இன்று முதல் சென்னையில் 82 ரேஷன் கடைகளில் மலிவு விலையில் கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தக்காளியின் விலை கிடு கிடு வென உயர்ந்து வந்தது. கடந்த வாரத்தில் இருந்து ஒரு கிலோ தக்காளி விலை 90  முதல் 110 வரை  விற்பனை ஆகி வந்தது. தக்காளி வரத்து குறைவாலும் கோடை மழை காரணத்தினாலும் தக்காளி விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து இருந்த நிலையில் தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

திடீர் தக்காளி விலை உயர்வால் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 68 ரூபாய்க்கும் , பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

தக்காளி விலை குறைய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பெரிய கருப்பன்  அறிவித்திருந்தார். அதின்படி  முதற்கட்டமாக சென்னையில் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில்  இன்று முதல் வடசென்னையில்  25 ரேஷன் கடைகள் தென் சென்னையில் 35 ரேஷன் கடைகள் மற்றும் மத்திய சென்னையில் 22 ரேஷன் கடைகள் என சென்னையில் மொத்தம் 82 ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 1 கிலோ தக்காளி மட்டுமே விற்பனை செய்யப்படுவது குறிப்பிடதக்கது.

இதனால் காலை 8 மணி முதல்  தக்காளி வாங்குவதற்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் ரேஷன் கடைகளில் குவிந்தனர். தேனாம்பேட்டையில் உள்ள நியாய விலை கடை ஒன்றில் காலை 9:00 மணிக்கு தொடங்கப்பட்ட தக்காளி விற்பனை 9: 45 மணிக்குள் நிறைவடைந்தது. ஒரு மணி நேர இடைவெளியில் பொதுமக்கள் தக்காளியை வாங்கிச் சென்றனர்.

அன்றாட சமையலுக்கு தக்காளி என்பது மிக அத்தியாவசியம். திடீர் என தக்காளி விலை உயர்ந்ததால் அன்றாட வாழ்வதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும். ஒரு கிலோ தக்காளி 20  ரூபாய்க்கு விற்று  வந்த நிலையில் திடீரென கிலோ 100 ரூபாய் வரை எட்டியது அதிர்ச்சியாக இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

மற்ற கடைகளில் தக்காளியின் விலை கிலோவுக்கு 100 முதல் 120 110 என விற்கப்படும் நிலையில் நியாய விலை கடைகளில் கிலோவுக்கு 60 ரூபாய் தக்காளி விற்பனை செய்வது வாங்குவதற்கு ஏதுவாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்ததோடு ஒரு நாளைக்கு ஒரு கிலோ மட்டுமே தக்காளி விற்பனை செய்யப்படுவதாகவும் ஒரு நாளைக்கு இரண்டு கிலோ விற்பனை செய்தால் வாங்குவதற்கு ஏதுவாக இருக்கும் எனவும் தக்காளி விலை நியாய விலை கடைகளில் இன்னும் சற்று குறைவாக விற்பனை செய்ய வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.