#Breaking வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த கேரட் விலை; ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?

கேரட்டின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் கேரட் உற்பத்தி செய்யப்படும் இடங்களான ஊட்டி, ஒசூர், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் கேரட் விளைச்சல் மற்றும் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அண்டை மாநிலங்களிலும் மழை பெய்து வருவதால் தமிழக மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக வரக்கூடிய கேரட்களின் வரத்து கணிசமான அளவு குறைந்துள்ளது. இதனால், கடந்த இரண்டு மாதங்களில் கேரட் விலை, மூன்று மடங்கு விலை உயர்ந்துள்ளது.

நாகர்கோவிலில் கிலோ 30 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ கேரட், இன்று காலை முதல் 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் பீன்ஸ் 40 ரூபாயில் இருந்து 60 ரூபாயாகவும், பாகற்காய் 30 ரூபாயில் இருந்து 60 ரூபாயாகவும், பீட்ருட் 20 ரூபாயில் இருந்து 40 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

சென்னை கோயம்பேட்டிற்கு நாளொன்றுக்கு 2 ஆயிரம் மூட்டைகள் வந்த நிலையில் தற்போது 500 மூட்டைகள் மட்டுமே வருவதாக கூறப்படுகிறது. இதனால் கேரட் விலை அடுத்த 2 வாரங்களுக்கு உச்சத்தில் இருக்கும் என கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோயம்பேடு மார்க்கெட்டில் 30 முதல் 40 ரூபாய் வரை விற்பனையாகி வந்த ஒரு கிலோ கேரட்டின் விலை தற்போது ரூ.120 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment