சமஸ்கிருத சர்ச்சை: டீன் ரத்தினவேல் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது ஏன்?… அமைச்சர் விளக்கம்!

மகரிஷி சரக் சபத் உறுதிமொழி விவகாரத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட மதுரை மருத்துவக்கல்லூரி முதல்வர் ரத்தினவேலு மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்தப்படுவார் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

மதுரை மருத்துவக்கல்லூரியில் மகரிஷி சரக் சபத் எனும் சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்பட்டது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா, சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். இதே போன்று ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரியில் நடைபெற்றிருப்பதால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜவாஹிருல்லா வலியுறுத்தினார்.

அதற்கு விளக்கமளித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தேசிய மருத்துவ ஆணையம் அனுப்பியதாக சமூக வலைதளங்களில் சுற்றறிக்கை பரவிய நிலையில் அது தொடர்பாக அனைத்துகல்லூரி முதல்வர்களுக்கும் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக கூறினார்.

அந்த சுற்றறிக்கையில் சரக் சபத் போன்ற உறுதிமொழி போன்று எதுவும் எடுக்க கூடாது என கூறப்பட்டிருந்தாகவும் மா சுப்பிரமணியன் விளக்கமளித்தார். இருப்பினும் மதுரை மருத்துவக்கல்லூரியில் சரக் சபத் உறுதிமொழி ஏற்கப்பட்டது என்ற தகவல் தெரிந்தவுடன் முதலமைச்சரின் உத்தரவுப்படி மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவக்கல்லூரி இயக்குனர் விசாரணை நடத்தியதையும் கல்லூரி முதல்வர் மாற்றப்பட்டதையும் மா சுப்பிரமணியன் சுட்டிக்காட்டி பேசினார்.

வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடபெறாமல் இருக்க அனைத்து மருத்துவக்கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அமைச்சர் கூறினார். அதே நேரத்தில் மதுரை மருத்துவக்கல்லூரி முதல்வர் கொரனா பரவல் காலத்தில் சிறப்பாக பணியாற்றினார் எனவும், நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்துவிட்டார் என்பதாலும் முதலமைச்சரின் உத்தரவுப்படி மீண்டும் அவர் மதுரை மருத்துவக்கல்லூரியிலே பணியமர்த்தப்படுவார் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment