விருது வென்றவர்களுக்கு விரும்பும் இடத்தில் வீடு… தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாதமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் மூலமாக வீடு வழங்கப்படும்” என அறிவித்திருந்தார்.

இவ்வறிவிப்பினைச் செயற்படுத்தும் பொருட்டு கீழ்க்கண்ட விருது பெற்றவர்களுக்குக் ‘கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் இல்லம் வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தேசிய அளவிலான சாகித்ய அகாதமி விருது, ஞானபீட விருது, (பாரதிய ஞானபீடம் என்ற பண்பாட்டு இலக்கியக் கழகம்), செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பியர் விருது, கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது மற்றும் நோபல் பரிசு (தமிழ் இலக்கியத்திற்கு) விருது ஆகிய விருதுகளைப் பெற்றவர்களும் எதிர்காலத்தில் இவ்விருதுகளைப் பெறும் தமிழ்நாட்டைப் சேர்ந்தவர்களுக்கு மற்றும் பிற மாநிலத்தவராயினும் அவர்களுக்குத் தமிழ்நாட்டின் எல்லைக்குள் அமையும் வகையில் வீடு வழங்கப்படும்.

ஏற்கனவே வீடு வைத்திருக்கும் விருதாளர்களும், மத்திய மாநில அரசுகளில் பணியாற்றுபவர்களும் மற்றும் ஓய்வூதியம் பெற்றுவரும் விருதாளர்களும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். ‘கனவு இல்லம்‘ திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் நேர்வில் ஒவ்வொரு நிதியாண்டிற்கும் அதிகபட்சமாகப் பத்து விருதாளர்களுக்கு வீடுகள் வழங்கப்படும். விண்ணப்பப்படிவம் தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.tn.gov. <http://www.tamilvalarchithurai.tn.gov.> in என்ற வலைத்தளத்தில் விருது விண்ணப்பம் என்ற பகுதியில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை. 600 008 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
(தொ.பே.எண்.044-28190412, 044-28190413. மின்னஞ்சல் முகவரி: tamilvalarchithurai@gmail.com <mailto:tamilvalarchithurai@gmail.com>)

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment