தமிழகத்தில் இயல்பை விட மழை அதிகம்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் பெய்த மழையை விட இந்த ஆண்டு 17 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மழை பெய்து வந்தது என்பதை பார்த்தோம். சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இந்த மழை காரணமாக நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி உள்ளன என்பதும் இதனால் பல மாதங்களுக்கு தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறப்பட்டது
அதேபோல் விவசாயத்திற்கும் தாராளமாக தண்ணீர் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் அவர்கள் தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் இயல்பை விட 17 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளதாகவும், குறிப்பாக சென்னையில் இயல்பை விட 7 சதவீதம் அதிகமாக மழை பெய்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
