புதிய பள்ளி கட்டிடங்கள் முதல் புத்தக திருவிழா வரை; பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ. 40,299 ஒதுக்கீடு!

தமிழ்நாடு சட்டசபையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட் 2023) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

பள்ளிக் கல்வித்துறை குறித்த அறிவிப்புகளை வாசித்த நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும் என்றும், இந்த பள்ளிகளில் பணியாற்றும் அனைவரின் பணிப்பலன்கள் பாதுகாக்கப்படும் என்றும் அறிவித்தார்.

4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா நடத்தப்படும் எனவும் அறிவித்தார்.

மதுரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவு நூலகம் ஜூன் மாதம் திறக்கப்படும் என அறிவித்த நிதி அமைச்சர் பிடிஆர், அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளை தமிழில் மொழி பெயர்த்திட ரூ. 5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நடப்பாண்டை போலவே அடுத்த ஆண்டும் சர்வதேச புத்தக கண்காட்சி அமைக்கப்படும், புதிய பள்ளி கட்டிடங்கள் கட்ட ரூ.7,000 கோடி ஒதுக்கீடு, நான் முதல்வன் திட்டத்துக்கு ரூ50 கோடி நிதி ஒதுக்கீடு ஆகிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

பள்ளி கல்வித்துறைக்கு ரூ. 40,299 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அனைத்து தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் பலன் பெறும் வகையில் காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கப்படுவதாகவும், அதற்காக 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் நிதி அமைச்சர் அறிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.