ஈபிஎஸ், ஓபிஎஸ் என மாறி மாறி சந்திக்கும் அண்ணாமலை.. என்ன தான் திட்டம்?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகிய இருவரையும் மாறி மாறி சந்தித்து வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணி மற்றும் ஓ பன்னீர் செல்வம் அணி ஆகிய இரு அணிகளும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. இருப்பினும் இரு அணிகளின் வேட்பாளர்கள் இன்னும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்தார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடந்ததாக கூறப்பட்டது. இருப்பினும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாஜக ஆதரவு என்று அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.

annamalai இந்த நிலையில் இன்று ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அண்ணாமலை சந்திக்க இருப்பதாகவும் இந்த சந்திப்புக்கு பின்னரே பாஜகவின் நிலை குறித்து அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி அணியின் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் தென்னவன் இன்று மதியம் வேட்பு மனு தாக்கல் செய்ய இருந்த நிலையில் திடீரென அவர் ஏழாம் தேதி தாக்கல் செய்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. பாஜகவின் முடிவை பொருத்தே வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

annamalai meeting

இந்த நிலையில் அதிமுகவின் எந்த அணிக்கு பாஜக ஆதரவு கொடுக்கும்? அல்லது இரு அணிகளையும் இணைக்க முயற்சி எடுக்கப்படுமா? ஓபிஎஸ் அணியின் வேட்பாளரை வாபஸ் செய்ய அண்ணாமலை முயற்சி செய்வாரா? அல்லது இரு அணிகளின் ஆதரவோடு பாஜகவை வேட்பாளர் நிறுத்துமா? என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் திமுக கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்து வருகிறார். அவருக்கு ஆதரவாக தமிழகத்தின் அனைத்து அமைச்சர்களும் களத்தில் இறங்கி உள்ளனர் என்பதும் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.