அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திட்டங்களை முடக்கியது அதிமுக அரசு தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். நல்ல திட்டங்கள் எதுவாக இருந்தாலும் அது திமுக ஆட்சியிலும் தொடரும் என்றும் உறுதி கூறினார்.
சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஆட்சிக்காலத்தில் ஏழைப்பெண்களுக்கு உதவிடும் வகையில் செய்லபடுத்தி வந்த தாலிக்கு தங்கம் திட்டம், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கைவிட்டதாக குற்றஞ்சாட்டினார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக தொடங்கிய திட்டங்களை திமுக நிறுத்துவது போன்ற போலித்தோற்றத்தை உருவாக்க ஓபிஎஸ் முயல்வதாக விமர்சனம் செய்தார். திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றியது யார்?, அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பாழ் படுத்தியது யார்? கல்வெட்டு மற்றும் திட்டங்களில் கருணாநிதி பெயரை எடுத்த ஆட்சி எது? ராணி மேரி கல்லூரியை அப்புறப்படுத்த முயன்றது யார்? என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், உழவர் சந்தைகளை மூடியது யார்? உடன்குடி மின் திட்டத்தை நிறுத்தியது யார்?, மதுரவாயல் – துறைமுகம் சாலை திட்டத்தை முடக்கியது யார்?, பாடப்புத்தகத்தில் கருணாநிதி பெயரை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்தது யார்? எனவும் கேள்வி எழுப்பினார்.
நல்ல திட்டங்கள் எதுவாக இருந்தாலும் அதை தொடரும் ஆட்சி கருணாநிதி ஆட்சி, அது தங்கள் ஆட்சி எனவும் கூறி பதிலுரையை நிறைவு செய்தார்.