#Breaking ஜனவரி 13 வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்; சபாநாயகர் அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 13ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை அரங்கில் இன்று காலை 10 மணிக்கு கூடியது. சட்டப்பேரவை கூட்டத்தொடரைப் பொறுத்தவரை மரபுப்படி ஆளுநர் உரையுடன் இன்றைய கூட்டத்தொடர் ஆரம்பமானது. கூச்சல், குழப்பங்களுக்கு இடையே இதுவரை தமிழ்நாடு சட்டப்பேரவையிலேயே நடைபெறாத பல்வேறு சம்பவங்கள் அரங்கேறின.

தமிழ்நாடு அரசு அச்சடித்து கொடுத்த ஆளுநர் உரையில் இருந்த திராவிட மாடல், பெண்ணுரிமை, தமிழ்நாடு, பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகிய சொற்களை ஆளுநர் ஆர்.என்.ரவி படிக்காமல் புறந்தள்ளியுள்ளார். ஆங்கிலத்தில் உரையை வாசித்த ஆளுநர் Tamilnadu Government என்பதற்கு பதிலாக This government என உரையை வாசித்துள்ளார். இதுகுறித்து அவையில் ஆளுநர் இருக்கும் போதே முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டினார்.

தமிழக அரசு தயாரித்து, ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகு அச்சிடப்பட்ட உரையில் இடம் பெற்றிருந்த சொற்களையும், குறிப்பிட்ட பகுதிகளையும் ஆளுநர் வாசிக்காமல் புறக்கணித்ததாக குற்றச்சாட்டினார். எனவே ஆளுநர் வாசித்த உரைக்குப் பதிலாக அச்சிடப்பட்ட முழு உரையையே சட்டப்பேரவை குறிப்பில் இடம் பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி வழக்கமான சட்டப்பேரவை மரபுக்கு எதிராக அவை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே வெளியே புறப்பட்டுச் சென்றார். அவருடன் அதிமுக எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்தனர். இப்படியான பரபரப்பான சூழ்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 13ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் காங்கிரஸ் ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈவே. ரா. திருமகன் மறைவுக்கு  நாளை இரங்கல் தெரிவிக்கப்பட்டதும் அவை ஒத்திவைக்கப்பட உள்ளதாகவும் ஜனவரி 13ம் தேதி வரை சட்டப்பேரவையை நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.