12 ராசிகளும், ஒரே சக்கர வடிவில் அமையப் பெற்றிருக்கும் சிவபீடம் இதுதாங்க…!

12 ராசிகளும், ஒரே சக்கர வடிவில் அமையப்பெற்றிருக்கும் சிவபீடம் என்று சிறப்பைப் பெற்றுள்ள தலம் ஏகாம்பரேஸ்வரர் கோவில். இது காஞ்சிபுரம் அருகே உள்ள கோவில் என்று நினைத்து விடாதீர்கள். திருச்சி அருகே உள்ள ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில். ராசி கோவிலாக திகழ்கிறது. இதைப் பற்றிப் பார்ப்போம்.

மனிதர்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், 9 கிரகங்கள் மற்றும் திதி, வார, நட்சத்திர, யோக, கரணம் என்று சொல்லக் கூடிய பஞ்சகங்கள் போன்றவை தான் நிர்ணயம் செய்கின்றன.

இவைகளால் ஏற்படக்கூடிய தோஷங்களில் ராசி ரீதியாகவும், நட்சத்திர ரீதியாகவும் மனிதர்களாகிய நாம் ஏதோ ஒரு வகையில் பாதிப்புக்குள்ளாகிறோம். அந்த பாதிப்பில் இருந்து விடுபட பலரும் பரிகாரத் தலங்களைத் தேடிச் செல்கிறார்கள்.

அந்த வகையில் நமக்கெல்லாம் சிறந்த பரிகார தலமாக இருக்கிறது திருச்சி அருகே உள்ள ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில். சுமார் 1300 வருடங்களுக்கு முற்பட்ட மிகப் பழமை வாய்ந்த சிவாலயம் இது.

12 ராசிகள்

இத்தல இறைவனின் பெயர் ஏகாம்பரேஸ்வரர். அம்பாளின் திருநாமம் காமாட்சியம்மன். இந்த சிவாலயத்தில் வட்ட வடிவிலான பீடம் அமைந்துள்ளது. இந்த பீடத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய பன்னிரண்டு ராசிகளுக்குரிய குறிகள் பொறிக்கப்பட்டுள்ளன.

yekambareswar
Yekambareswar

மேலும் ஐராவதம், புண்ட்ரீகன், புஷ்பதந்தன், குமுதன், சார்வபவுமன், அஞ்சனன், சுப்ரதீபன், வாமனன் என திசைகளை காக்கும் அஷ்டதிக் கஜங்கள்(யானைகள்), நாகங்கள், 64 கலைகளை விளக்கக்கூடிய சிற்பங்கள், ஒவ்வொரு ராசிக்கும் உரிய அதி தேவதை, பிரத்தியதி தேவதைகள் ஆகியன 4, 8, 16, 32 ஆகிய எண்ணிக்கையில் வாழ்க்கையின் தத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பீடத்தின் மீதுதான் அனுக்கிரக மூர்த்தியாக ஏகாம்பரேஸ்வரரும், சாரங்கநாத சித்தர் வழிபட்ட சிவ லிங்கமும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

சிறப்பு

இந்தியாவிலேயே ஒரே இடத்தில் இது போன்ற சிறப்பம்சங்களுடன் கூடிய சிவாலயம் இதுதான் என்பது கூடுதல் சிறப்பு. இத்தலத்தில் காமாட்சியம்மன், சிந்தாமணி மாணிக்க விநாயகர், ஐஸ்வர்ய மகாலட்சுமி, ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி, அரசு-வேம்பு இணைந்த மரத்தடியில் ராகு, கேதுவுடன் கூடிய வலம்புரி விநாயகர், நவக்கிரகங்கள், காலபைரவர் ஆகிய சன்னிதிகளும் தனித் தனியாக அமையப்பெற்றுள்ளன.

 ஜீவ சமாதி

சாரங்கநாதர் எனும் சித்தர் இந்த ஆலயத்தில் ஏகாம்பரேஸ்வரரை வழிபட்டதாகவும், அவர் இந்த ஆலயத்தில் ஜீவ சமாதி அடைந்துள்ளதாகவும் கருதப்படுவதால், அவர் நினைவாக துளசி மாடமும், அதன் அருகில் சிவலிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இந்த சித்தர் சன்னிதியில் ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் மாலையில் யாக வேள்வியும், 210 சித்தர்களின் தமிழ் போற்றி வழிபாடும், அன்னதானமும் நடைபெறுகிறது. இந்த வழிபாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகின்ற பக்தர்கள் தங்களது ஜாதக குறிப்பினை வைத்து எடுத்துச்செல்கின்றனர்.

கோவிலின் வடபுறத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் மரங்கள் அமையப்பெற்றுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய மரங்களில் ஒரு குடம் நீர் ஊற்றுவது சிறந்த பரிகாரம்.

Pagalavadi koil
Pagalavadi koil

ஆலயத்தின் அக்னி மூலையில் தீர்த்தக் குளம் உள்ளது. ராமர் சொல் கேட்டு அக்னிபிரவேசம் செய்த சீதாதேவி, இக்குளத்தில் நீராடி இங்குள்ள சிவனை வழிபட்டதாக ஐதீகம். எனவே இந்த குளத்திற்கு ‘சீதாதேவி குளம்’ என்ற பெயரும் உண்டு.

இத்திருத்தலத்தில் மாதம் இருமுறை பிரதோஷம், சிவராத்திரி, தேய்பிறை அஷ்டமி, ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம் உள்ளிட்ட விசேஷங்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இத்தலத்தில் பக்தர்கள், தங்கள் ராசிக்குரிய இடத்தில் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.

இந்த ஆலயத்தில் தற்போது 63 நாயன்மார்கள் மற்றும் சமயக்குரவர்களான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகியோரது திருமேனிகளை பிரதிஷ்டை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 9.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் பகல் 12 மணி வரையும், இரவு 7.30 மணி வரையும் ஆலய தரிசனம் செய்யலாம்.

இந்தக் கோவிலுக்கு அருகில் பரந்தமலை என்னும் மலை உள்ளது. அங்கு சப்தகன்னியர்களும், வற்றாத சுனையும் உள்ளது. எல்லா காலத்திலும் அந்த சுனையில் நீர் இருந்து கொண்டே இருக்கும். மேலும் அங்கு சித்தர்கள் வாழ்ந்த சிறிய குகைகளும் காணப்படுகின்றன.

அமைவிடம்

திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் பகளவாடி என்ற ஊர் உள்ளது.

இங்கிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கரட்டாம்பட்டி தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.

கல்லூரியில் சுற்றுச்சுவரை ஒட்டி கிழக்கு திசையில் செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றால் சத்திரம் என்ற இடத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews