துணிகள் துவைக்க போறீங்களா?! அப்ப இதை படிச்சுட்டு போங்க!!

துணி துவைக்குறதுலாம் டிப்சா?! கைப்பிடி சோப்பு தூளை வாளியில் கொட்டி தண்ணீர் ஊற்றி நல்லா நுரைவரும்வரை கரைச்சு துணியை அதில் அரை மணிநேரத்துக்கு ஊறவச்சு, சோப் போட்டு துவைச்சு நல்ல தண்ணியில் இரண்டு முறை அலசி எடுத்து பிழிந்து காய வச்சு எடுத்தா பளிச்.. பளிச்… இல்லையென்றால், மெஷினில் துணிகளை போட்டு ரெண்டு ஸ்பூன் பவுடரும், துணியும் போட்டு ஸ்விட்ச் ஆன் பண்ணால் வேலை முடிஞ்சுதுன்னு நினைக்குறீங்களா?!

9858e96b2a22efc065686812db5c81d2

உங்கள் வாதம் மேலோட்டமாய் பார்த்தால் சரிதான். ஆனா, பாருங்க நீங்க துவைச்ச துணி 100 சதவிகிதம் அழுக்கு இல்லாமலோ அல்லது முற்றிலும் கிருமி நீங்கினதுன்னோ உங்களால் உத்தரவாதம் தரமுடியுமா?! கந்தையானாலும் கசக்கி கட்டனும்ன்னு பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அப்படி கட்டும் உடை நேர்த்தியாகவும், சுத்தமானதாகவும் இருப்பதும் அவசியம்.. இனி துணிகள் துவைக்கவும், அந்த உடைகளை நல்ல முறையில் பராமரிக்கவும் சில டிப்ஸ்களை பார்ப்போம்…

அழுக்கு துணிகளை கண்ட இடத்தில் போடாமல் அதற்கென இருக்கும் கூடையில் போட பழக வேண்டும். துணிகளை மொத்தமாய் தண்ணியில் முக்காமல் தினசரி உடுத்தும் ஆடைகள், பட்டு துணிகள், உள்ளாடைகள் என தனித்தனியாய் ஊற வைத்து துவைக்க வேண்டும். துணிகளின் உள்புறம் வெளியில் தெரியுமாறு காய வைத்தால் துணிகள் வெயிலில் நிறம் மாறாமல் இருக்கும். உள்ளாடைகளை தனியே துவைக்கும் பழக்கத்தினை வைத்திருப்பது கிருமிகள் தொற்றை தவிர்க்கும்.

துணிகளை துவைத்து காயவைக்கும்போது சோப்பு தூள், சோப்பின் வாசனை ஆளையே தூக்கும். ஆனால், உடுத்தியபிறகு அந்த வாசனை வராது. துணிகளுக்கென விளம்பரங்களில் வரும் லிக்விட்களை பயன்படுத்தினாலும் ரொம்ப நேரத்திற்கு பயன் தராது. துணிகளின் தரத்திற்கேற்ப சோப் தூள் சேர்த்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து ஊற விடுங்கள். அதிகப்படியான அழுக்கு துணிகளில் இருந்தால் வினிகரும் பயன்படுத்தலாம். துணிகளை துவைத்து நல்ல நீரில் அலசும்போது அந்த தண்ணீரில் மைல்ட் ஷாம்பு கரைத்து அலசினால் துணிகளின் நிறம் மாறாது. மினுமினுப்பும் குறையாது..

துவைத்த துணிகளை நல்ல காற்றோட்டமான இடத்தில் உலர வைப்பது நல்லது. கிருமிகளோடு, கெட்ட வாடையும் நீங்கும். துணிகளை நன்றாக உதறி விசாலாமாக போட்டு காய வைத்தால் துணிகளில் மடிப்பு, சுருக்கம் இல்லாமல் இருக்கும். சூரிய ஒளியில் நீண்ட நேரம் துணிகளை உலற விடுவது கூடாது. குறிப்பிட்ட இடைவெளிகளில் துணிகளை திருப்பி போட்டு துணிகளை எடுத்துவிடவேண்டும். இது துணிகளின் ஆயுளையும் வண்ணத்தையும் நீண்ட நாள் இருக்க செய்யும்.

துவைத்து காய வைத்த துணிகளை கட்டில்மீதும், நாற்காலிமீதும் போட்டு வைக்காமல் உடனுக்குடன் மடித்து விட்டால் துணிகள் சுருக்கமில்லாமல் இருக்கும். வீடும் அழகா இருக்கும். துணிகள் மடித்துவைக்கும் அலமாரியில் நாப்தலின் உருண்டைகள் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது. காய்ந்த வேப்பிலைகள், வசம்பினையும்கூட போட்டு வைக்கலாம். காலி குளியல் சோப்பு அட்டைகளை துணிகளுக்கிடையில் வைத்தாலும் துணிகள் வாசனையாய் இருக்கும். காட்டன் உருண்டைகளைஎலுமிச்சை சாறு அல்லது காபி டிகாஷன் அல்லது வாசனை திரவியத்தினை தண்ணீரில் கலந்து அதில் காட்டன் உருண்டைகளை முக்கியெடுத்து, காய வைத்து மீண்டும் அந்த நீரில் முக்கியெடுத்து மீண்டும் காய வைத்து.. மீண்டும் முக்கியெடுத்து நன்றாக காய வைத்து துணிகளுக்கிடையில் வைத்தால் துணிகள் எலுமிச்சை/காபி/ரோஜா/மல்லிகை வாசனையுடன் இருக்கும்… மடித்த சட்டை, புடவை, சுடிதார், உள்ளாடைகள் என அந்தந்த துணிகளை அந்தந்த இடத்தில் வைப்பது நேர விரயத்தினை தடுக்கும்.

இதெல்லாம் முயற்சி செய்து பார்த்துட்டு வீட்டில் நல்ல பெயர் வாங்குங்க!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print