தஞ்சாவூரில் ஷவர்மா சாப்பிட்ட 3 மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளதால் அரசு கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் கால்நடை மருத்துவக்கல்லூரியில் பயிலும் பிரவீன், பரிமலீஸ்வரன், மணிகண்டன் ஆகிய மாணவர்கள் நேற்று இரவு துரித உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்டனர். இதில் ஒவ்வாமை உணர்வு ஏற்பட்டு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஏற்கனவே கேரளாவில் சவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இரண்டாவது நாளாக ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல பிரியாணி கடையில் 8 கிலோ இறைச்சியை கண்டுபிடித்த அதிகாரிகள் அவற்றை அழித்தனர். இதேபோல் மாவட்டம் முழுவதுமாக 28 கடைகளில் நடத்திய சோதனையில் முப்பத்தி எட்டு கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்தி ஷவர்மா தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.