Tamil Nadu
இன்று ஒரே நாளில் 3 திமுக எம்.எல்.ஏக்களுக்கு அடுத்தடுத்து கொரோனா: என்ன நடக்குது திமுகவில்

தமிழகத்தில் உள்ள ஒருசில எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது தெரிந்ததே. குறிப்பாக திமுக எம்.எல்.ஏக்கள் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது அக்கட்சியினர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது
இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 3 திமுக எம்.எல்.ஏக்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் அக்கட்சியின் தொண்டர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. இன்று காலை கிருஷ்ணகிரி தொகுதி திமுக எம்.எல்.ஏ. செங்குட்டுவன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை பார்த்தோம். மேலும் அவருக்கு ஓசூர் மருத்துவமனயில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி மேலும் இரண்டு திமுக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கார்த்திகேயன் மற்றும் ராணிப்பேட்டை திமுக எம்.எல்.ஏ ஆர்.காந்தி ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து வேலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கார்த்திகேயன் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையிலும் ராணிப்பேட்டை திமுக எம்.எல்.ஏ ஆர்.காந்தியும் அதே வேலூர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து 3 திமுக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும், தமிழகத்தில் இதுவரை 16 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
