
தமிழகம்
உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு 1000 ரூபாய் திட்டம்-யார் யாருக்கு பொருந்தும்?
தமிழகத்தில் கடந்த ஆட்சியில் இருந்து தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றப்பட்டு உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த திட்டம் இன்றைய தினம் முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று ஏராளமானோர் இதற்காக பதிவு செய்தனர். இவ்வாறுள்ள நிலையில் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் திட்டத்தின் மூலம் யாராவது பயன்பெறுவார்கள் என்று தகவல் கிடைத்துள்ளது.
உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தின் சில வழிகாட்டு நெறிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி அரசு பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் நிதியுதவி பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும்வரை மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளியில் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்று பின் அரசு பள்ளியில் சேர்ந்தாலும் கூட நிதி உதவி பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொலைதூர கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு நிதியுதவித் திட்டம் பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் கீழ் முதுநிலை படிப்பு பயிலும் மாணவிகளும் பயன்பெற இயலாது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து ஏதேனும் தகவல் அறிய 14417 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் உதவி பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2022-2023 ஆம் கல்வியாண்டில் புதிதாக பட்டப்படிப்பில் சேர்ந்து மாணவிகள் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவிகளும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரியில் இரண்டாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டு செல்லும் மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு கூறியுள்ளது. 2021-2022 ஆம் ஆண்டில் இறுதியாண்டு படித்த மாணவிகள் இந்த திட்டத்தில் பயனடைய வாய்ப்பில்லை என்று அரசு விளக்கமளித்துள்ளது.
