திரையுலகில் வெளியாகும் படங்களில் சில படங்கள் ஒரே மாதிரியான கதையம்சம் கொண்ட படங்களாக இருக்கும். ஆனால் வெவ்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கும். அதற்காக அந்த படத்தை காப்பி என்று கூறி விட முடியாது. அந்த படத்தின் ஒன் லைனை வைத்து வேறு ஒரு கதைகளத்தை தயார் செய்திருப்பார்கள்.
அந்த வகையில் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஒரு படமும் தமிழ் சினிமாவில் எப்போதோ வந்த படத்தின் கதையை ஒத்திருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். மேலும் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் படம் குறித்த சில தகவல்கள் இணையதளங்களில் வெளியாகி வருகின்றன.
அதன்படி மாறன் படத்தில் நடிகர் தனுஷ் ஒரு பத்திரிகையாளராக நடித்துத்துள்ளதாகவும், அவருக்கும் அரசியல்வாதியுமான சமுத்திரக்கனிக்கும் இடையே ஏற்படும் மோதலும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் மையமாகக் கொண்டே மாறன் படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன் நடிப்பில் வெளியான முதல்வன் படத்தின் கதையை போலவே மாறன் படத்தின் கதை உள்ளது. முதல்வன் படத்திலும் அர்ஜூன் பத்திரிக்கையாளராகவும், ரகுவரன் அரசியல்வாதியாகவும் இருப்பார்கள். எனினும் படம் வெளியானால் தான் என்ன கதை என்பது தெரியவரும்.