திருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்; பக்தி முழக்கத்துடன் பரணி தீப தரிசனம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் கருவறையில் வேதமந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்பட ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலையில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தேரோட்டம்:

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலாக கருதப்படும் அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் திருக்கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

துவக்க விழாவின்போது வேதமந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கோவிலில் உள்ள 67 அடி உயர தங்க கொடிமரத்தில் கொடியை ஏற்றினர். அதன்பிறகு மாடவீதியுலாக்கள் நடந்தன. கடந்த 2ம் தேதி கோவிலில் வெள்ளி தேரோட்டம் நடந்தது. கடந்த 3ம் தேதி விநாயகர் தேரோட்டம் துவங்கியது. பக்தர்கள் வடம்பிடித்து அரோகரோ கோஷத்துடன் தேரை இழுத்தனர். இதையடுத்து காலை 9 மணிக்கு முருகர் தேரும், மதியம் அண்ணாமலையார் தேரோட்டமும் விமரிசையாக நடைபெற்றது. மேலும் சண்டிகேஸ்வரர் தேரை சிறுவர், சிறுமிகள் வடம்பிடித்து இழுத்தனர்.

பரணி தீபம் ஏற்றம்:

இந்நிலையில் தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் இன்று ஏற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று அதிகாலை 4 மணியளவில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதன்பிறகு கோவிலில் உள்ள அனைத்து சுவாமிகளுக்கு அந்த தீபம் காட்டப்பட்டது. ‌ அர்த்த மண்டபத்தில்‌ ஐந்து தீபங்களாக காட்டப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்பட ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இன்று மாலை மகா தீபம்:

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மகா தீபம் இன்று மாலை 6 மணிக்கு ஏற்றப்பட உள்ளது. இதற்காக மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் தீப கொப்பரைக்கு நேற்று முன்தினம் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று மாலையில் மலை உச்சியில் 5 அடி உயரம், 250 கிலோ எடை கொண்ட கொப்பரையில் 3500 லிட்டர் நெய் மற்றும் ஆயிரம் மீட்டர் காடா துணிகள் பயன்படுத்தப்பட்டு மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.

இந்த மகாதீப நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கில் பக்தர்கள் திரளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்களின் பாதுகாப்புக்காக போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மகாதீப நிகழ்ச்சியை காண சென்னை உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு ரயில்கள், பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.