திருமண வரம் தரும் பங்குனி உத்திரம்

தமிழ்வருடங்களில் 12வதும், கடைசி மாதமுமான பங்குனியும்,  12 வது நட்சத்திரமான உத்திரம் நட்சத்திரமும் இணையும் நாளான இன்று பங்குனி உத்திரம் என இந்துக்களால் கொண்டாடப்படும்.   

எங்கேயோ பிறந்து வெவ்வேறு சூழ்நிலையில் வளர்ந்து வந்த ஒரு ஆணையும் பெண்ணையும் கணவன் மனைவியாய் இணைத்து வைக்க இறைவனால் மட்டுமே முடியும். இறைவன் அருள் இல்லாவிட்டால் மனிதர்கள் எத்தனை முயன்றாலும் திருமண பந்தத்தில் ஒரு ஆணையும் பெண்ணையும் இணைத்து வைக்க முடியாது. ஒரு திருமண பந்தத்தை ஏற்படுத்தவும், அவ்வாறு திருமணம் செய்துக்கொண்ட தம்பதியர் மன ஒற்றுமையுடனும், குழந்தை செல்வத்துடன் மகிழ்வுற்றிருக்க இறைவன் அருள் வேண்டி இருக்கும் விரதமே பங்குனி உத்திரம். இந்நாளில் விரதமிருந்து இறைவனை தியானித்து ஆலயங்களுக்கு சென்று,அங்கு நடக்கும் தெய்வத்திருமணங்களை தரிசித்து, இல்லாதவருக்கு இயன்றளவுக்கு உதவிகள் செய்து வந்தால் திருமண வாழ்க்கை நல்லபடியா அமையும். எல்லா நாளிலும் இறைவனை வணங்கலாம். ஆனால், குறிப்பிட்ட நாளில் இறைவனை வணங்கினால் கூடுதல் பலன் கிடைக்கும். இன்று சிவன் – பராசக்தி, ஶ்ரீராமர் – சீதை, முருகப் பெருமான் – தெய்வானை, ஆண்டாள் – ரங்கமன்னார், அகத்தியர் – லோபாமுத்திரை, ரதி – மன்மதன், இந்திரன் – இந்திராணி, நந்தி – சுயசை, சாஸ்தா – பூரணை, புஷ்கலை; சந்திரன் – 27 நட்சத்திர பெண்டிர் என ஏகப்பட்ட தெய்வத்திருமணங்கள் நடந்தேறியது இந்நாளில்தான்.

நீண்டநெடு தவத்திற்குப்பிறகு சிவப்பெருமான்,  தட்சனின் மகள் மீனாட்சியாய் அவதரித்த பார்வதிதேவியை சுந்தரேஸ்வரராய் அவதரித்து மணந்தது இந்நாளில்தான்.  இன்றைய தினம், சிவனுக்கும், பார்வதிக்கும் அபிசேக ஆராதனைகள் செய்வித்து, மேளதாளம் முழங்க, திருமாங்கல்யம் அணிவித்து, பால் பழம் தந்து, ஊஞ்சலாடி, பள்ளியறைக்கு தம்பதியினரை அனுப்பும் வைபவம் இன்றளவும் வெகு விசேசமாய் கொண்டாடப்படுது.

பாற்கடலில் பள்ளிக்கொண்டிருக்கும் விஷ்ணுபகவான், மகாலட்சுமியை மணந்ததும் இந்நாளில்தான். அதேப்போல், நாரதர் கலகத்தால், சிவப்பெருமானின் இடப்பாகத்தை பெற்ற பார்வதிதேவியின்பால் பொறாமைக்கொண்டு விரதமிருந்து விஷ்ணுபகவானின் மார்பில் லட்சுமிதேவியும், பிரம்மதேவனின் நாவில் சரஸ்வதியும் இடம்பிடித்தது இந்நாளில்தான். அதுமட்டுமல்லாமல் இந்நாளில்தான் பிரம்மா-சரஸ்வதிதேவி திருமணமும் நடந்தது.

மனிதன் எப்படி வாழ வேண்டுமென உணர்த்த, தானே அதன்படி வாழ்ந்து காட்ட ராமராய் விஷ்ணுபகவான் அவதரித்தார். ராம அவதாரத்தில், ராமர், லட்சுமணன், பரதன், சத்ருக்ணன் ஆகிய நால்வருக்கும் மிதிலையில் திருமணம் செய்தது இந்நாளில்தான்.  சிவப்பெருமானின் தவத்தினை கலைக்கும்பொருட்டு, அவர்பால் மன்மத பானம் விட்ட மன்மதனை, தனது நெற்றிக்கண்ணால் சிவன் எரிக்க, பின், அவன் மனைவி ரதியின் வேண்டுகோளுக்கிணங்கி மன்மதனை உயிர்பித்த தினம் இன்று. 

அமிர்தக்கலசத்தை அரக்கர்க்குலத்தவரிடமிருந்து மீட்க விஷ்ணுபகவான் மோகினியாய் அவதரிக்க, அவள் அழகில் சிவன் மயங்க, அவர்கள் இருவருக்குமாய் ஐயப்பன் அவதரித்தார். அப்படி ஐயப்பன் அவதரித்த தினமும் இன்றுதான். தேவர்குல தலைவனும், தேவலோகத்தின் அதிபதியுமான தேவேந்திரனுக்கும், இந்திராணிக்கும் திருமணம் நடப்பெற்றதும் இந்நாளில்தான். 

சிறந்த சிவபக்தரும், சித்தருமான அகத்தியமுனிவர் முக்தியடைய தடை உண்டானது. அத்தடை என்னவென இறைவனை குள்ளமுனி கேட்க, வாரிசு இல்லாததே அத்தடை என இறைவன் எடுத்துச்சொல்ல, வாரிசு வேண்டி, பக்தியிலும், குணத்திலும் சிறந்த லோபாமுத்திரையை அகத்தியர் மணந்தது இந்நாளில்தான். வில்லுக்கு விஜயன் எனப் புகழப்படும் பஞ்சப்பாண்டவர்களில் ஒருவனான, அர்ஜுனன் பிறந்த நாள் இந்நாள்.  ஆண்டாள் ரங்கநாதரை மணந்தது இந்நாளிதான். சூர பத்மனை அழித்து தெய்வானையை கரம்பிடித்தது இந்நாளில்தான். திருப்பரங்குன்றத்தில் முருகன் தெய்வானை திருமணம் சிறப்புற நடக்கும்.

பங்குனி உத்திரம் எனும் கல்யாணசுந்தர விரதம் இருக்கும் முறை…

பங்குனி உத்திர நாளில் அதிகாலை நீராடி, பகலில் ஒருவேளை மட்டும் உணவருந்தி மாலையில் சிவன், விஷ்ணு, முருகன் ஆலயங்களில் நடக்கும் திருமணத்தில் கலந்துக்கொண்டு தான தர்மங்கள் செய்ய வேண்டும். இதுமாதிரி 48 ஆண்டுகள் தொடர்ந்து விரதமிருந்தால் மறுப்பிறப்பு கிடையாது. பிறப்பு, இறப்பு சுழற்சியில் சிக்காமல் முக்திப்பேற்றை அடையலாம். 

இத்தனை சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திர நன்னாளில் திருமணமாகாத ஆண்களும், பெண்களும், திருமண வாழ்வு தடுமாற்றித்தில் இருப்போரும், கல்வி வளம் கிடைக்கவும் அருகிலிருக்கும் ஆலயத்திற்கு சென்று, அங்கு நடக்கும் தெய்வ திருமணங்களை கண்டு அருள்பெருக!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews