சிவபெருமானின் காணக்கிடைக்காத அற்புதக் காட்சி…இது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே…காணத்தவறாதீர்…!

கார்த்திகை மாதத்திற்கே மிகச்சிறப்பான நாள் இன்று தான். தீபத்திருநாள் என்று சொல்லக்கூடிய பெரிய கார்த்திகை இன்று தான் அனுசரிக்கப்படுகிறது.

சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் மிக முக்கியமானது திருவண்ணாமலை. பிறக்க முக்தி திருவாரூர். தரிசிக்க முக்தி சிதம்பரம். இறக்க முக்தி காசி. நினைக்க முக்தி திருவண்ணாமலை. எம்பெருமான் ஜோதிமயமாக நின்ற இடம் திருவண்ணாமலை.

சுவாமியை வழிபாடு செய்ய கர்ப்பக்கிரகத்தை நோக்கி செல்கையில் அங்கு கடுமையான வெப்பத்தை உணர முடியும். வெளியில் எவ்வளவு குளிராக இருந்தாலும் இந்த உஷ்ணத்தை உணர முடியும். பிரமனுக்கும், திருமாலுக்கும் அடிமுடி காண முடியாதவாறு இந்த ஜோதி சொரூபமாய் சுவாமி காட்சி அளித்தார்.

எல்லா உயிர்களுக்கும் நான் இருக்கிறேன். துன்பம் உங்களை ஒருபோதும் அண்டாது என்பதற்காக நெருப்பு மலையாக காட்சியளித்தார் சிவபெருமான். செல்வம், கல்வி இவற்றால் ஆணவம் கொண்டவர்களால் இறைவனைக் காண இயலாது. இப்படிப்பட்ட ஆணவம் நமக்கு எப்போதுமே வரக்கூடாது. கல்வியாலும் அந்த ஆணவம் வருகிறது.

எனக்குத் தெரியாதா…என்ற ஆணவம் வரும். படித்த படிப்புக்கு எந்தப் பயனும் கிடையாது. நான்….எனக்கு…எல்லாம் தெரியும் என்ற ஆணவம் இருந்தால் கடவுளை நெருங்க முடியாது. சுவாமிக்கு அண்ணா மலை என்று பெயர்.

அண்ணுதல் என்றால் நெருங்குதல். அண்ணா என்றால் நெருங்க முடியாது. கல்வியின் ஆணவம், செல்வத்தால் வரும் ஆணவம் இருப்பவர்களாலும் சுவாமியை நெருங்க முடியாது. எனக்கு செல்வம் இருக்கிறது. என்னால் எல்லாவற்றையும் வாங்க முடியும் என்ற ஆணவமும் நமக்கு ஒரு போதும் வரக்கூடாது.

இந்த ஆணவங்களை எல்லாம் சுட்டெரிப்பதற்காகவே அண்ணாமலை ஜோதி சொரூபமாய்க் காட்சி அளிக்கிறார். யாருக்கு ஆணவமில்லையோ அவர்களால் தான் முக்திநிலையை அடையமுடியும். இந்த ஆணவங்களை எல்லாம் அகற்றவே திருவண்ணாமலையில் சிவபெருமான் இப்படி ஜோதி சொரூபமாய்க் காட்சி அளிக்கிறார்.

திருக்கார்த்திகை தீபம் 3 நாள் விழா. முதல் நாள் ஏற்றுவது பரணி தீபம். இன்று (6.12.2022) ஏற்றுவது திருக்கார்த்திகை தீபம். நாளை (7.12.2022) ஏற்றுவது பஞ்சராட்த்ர தீபம்.

Deepam 2
Deepam 2

முதல் நாள் பஞ்சபூதங்களுக்கும், இரண்டாம் நாள் சிவபெருமான், முருகருக்கும் தீபம் ஏற்றப்படுகிறது. 3ம் நாள் பெருமாள் கோவில்களில் தீபம் ஏற்றுவர். குமாரதீபமாக முருகப்பெருமான் கோவில்களிலும் ஏற்றப்படுகிறது. அனைத்து ஆலயங்களிலும் ஏற்றக்கூடியது தான் இந்த தீபத்திருநாள்.

இன்று குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்றலாம். அதிகபட்சம் எவ்வளவு தீபம் வேண்டுமானாலும் ஏற்றலாம். 3ம் நாள் 15 தீபம் ஏற்றலாம்.

இன்று உபவாசம் இருந்து சிவபெருமானை வழிபடுதல் அவசியம். காலையில் எழுந்ததும் நீராடி திருநீர் அணிந்து விரதத்தைத் தொடரலாம். குழந்தைகள் கூட விரதம் இருக்கலாம். பசி வரும்போது பால், பழம் கொடுக்கலாம்.

ஆரோக்கியமாக உள்ளவர்கள் அன்று முழுவதும் விரதம் இருக்கலாம். செவ்வாய்க்கிழமை அன்று இந்த திருக்கார்த்திகை வருவதால் அதிவிசேஷம். முருகப்பெருமானுக்கும் இது விசேஷமான நாள். கார்த்திகை நட்சத்திரங்கள் சிறப்புப் பெற்ற நாள். முருகனை வேண்டியும் விரதம் இருக்கலாம்.

இன்று காலை எழுந்தது முதலே மௌனவிரதம் இருக்கலாம். காலை எழுந்தது முதல் மாலை 6 மணி வரை மௌனவிரதம் இருங்க. மௌனமா…அமைதியா…பேசாம ஒரு இடத்தில் இருந்து மனதில் முழுவதுமாக சிவனையே நினைத்து இருக்கும்போது அது உங்களது ஆன்மாவுக்கு ரொம்ப நல்லது.

சிவாய நம என்ற மந்திரத்தை மனதில் நினைத்துக்கொண்டே இருங்க. ஒரு விளக்காவது நெய்விளக்கு வைக்க வேண்டும். 27 விளக்குகள் ஏற்ற வேண்டும். 6 மணிக்கு திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றுவர். ஆண்டுக்கு ஒரு முறை தான் இப்படிப்பட்ட அற்புதக் காட்சியை நாம் காண முடியும்.

அந்த ஒரு நிமிட அனுபவம் மலை மேல் தீபம் ஏற்றும் நேரம் நமக்கு ஆனந்த அனுபவத்தைத் தரும். அர்த்தநாரீஸ்வரராக எம்பெருமான் எழுந்தருளி ஆனந்தத் தாண்டவம் புரிவது நமக்குக் கண்கொள்ளாக்காட்சி. இதை யாரும் தவறவிடாமல் டிவி முன் இருந்து பாருங்கள்.

அண்ணாமலைக்கு அரோகரா என்ற பக்தர்களின் கோஷம் அப்போது விண்ணில் முழங்கும்.

deepam 3
deepam 3

திருவண்ணாமலையில் தீபம் ஏற்றியதும் வீடுகளில் வாசலில் தான் முதல் தீபம் ஏற்ற வேண்டும். வாசலில் இருந்து தீபம் எடுத்துட்டுப் போயி பூஜை அறையில் வைங்க. வீடு முழுவதும் தீபம் வைங்க. பாத்ரூமில் கூட வைக்கலாம். மோட்டார்…தொட்டி அருகிலும் வைக்கலாம். பொரி உருண்டை, பழங்கள் கூட நைவேத்தியமாக வைக்கலாம்.

அதன்பின் இரவு உணவை எடுத்துக் கொண்டு விரதத்தைப் பூர்த்தி செய்யலாம். தொழிலில் அபிவிருத்தி, உயர் பதவி, எதை நினைத்து விரதம் இருக்கிறோமோ அதற்கான பலன்கள் கிடைக்கும். கோவில்களுக்கு எண்ணை வாங்கிக் கொடுப்பது, விளக்கு வாங்கிக் கொடுப்பது, அன்னதானம் செய்வது ரொம்பவே விசேஷமானது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.