முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், மூத்த அமைச்சர்கள் சிலரிடம் உள்ள துறைகள் இளம் அமைச்சர்கள் கைக்கு மாற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மே 7ம் தேதியோடு திமுக அரசு பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனையடுத்து தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த இரண்டு முறை அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டாலும் எந்த அமைச்சரின் பதவியும் பறிக்கப்படாத நிலையில், இந்த முறை பதவி பறிப்பு நடவடிக்கைகள் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி பதவி பறிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த பதவியானது மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமாருக்கு வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதுகாக்கப்பட்ட வனத்துறை பகுதியான மேடநாடு வனப்பகுதியில் தனியார் எஸ்டேட்டிற்கு சாலை அமைத்தது தொடர்பாக சர்ச்சையில் சிக்கிய சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனின் பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாக்கோட்டை அன்பழகன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோருக்கு பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.