குரூப் 2 தேர்வில் குளறுபடி; வினாத்தாள் வழங்க தாமதம் – சிதம்பரத்தில் பரபரப்பு!

சிதம்பரம் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் குரூப் 2 தேர்வில் குளறுபடி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2 தேர்வுகள் துவங்கியது. சிதம்பரத்தில் உள்ள காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட சில பள்ளிகளில் இந்த தேர்வுகள் நடந்தன. இதில் பங்கேற்க சுமார் 200 மாணவர்கள் வந்திருந்தனர்.

ஆனால் திட்டமிட்டபடி தேர்வுகள் துவங்கவில்லை. இதனால் காலதாமதம் ஆனது. தேர்வு துவங்குவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக மாணவர்கள் சிலர் தேர்வு மையத்தை விட்டு வெளியே வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் தாசில்தார் செல்வகுமார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது மாணவர்கள் தேர்வு நடத்துவதில் ஏற்பட்ட குளறுபடி குறித்து விளக்கியதோடு தங்களுக்கு காலதாமதம் ஏற்பட்டதற்கு ஈடாக தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் எனக்கூறி தாசில்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மாணவர்கள் தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கப்படும் என கூறப்பட்டதால் மாணவர்கள் தேர்வு அறைக்கு சென்றனர். இதனால் சுமார் 45 நிமிடம் தாமதமாக தேர்வு தொடங்கியது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.