தேனி மாவட்டம், சின்னமனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட காமாட்சிபுரம் ஊராட்சியில் மெயின் ரோட்டில் இண்டிகேஷ் ஏடிஎம் இயந்திரம், சீப்பாலக்கோட்டை செல்லும் சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையின் ஏடிஎம் இயந்திரம் என காமாட்சிபுரம் ஊராட்சியில் வேப்பம்பட்டி, பூமலைக்குண்டு, ஜங்கால்பட்டி,
எரக்கோட்டைபட்டி, எஸ்.அழகாபுரி, காமாட்சிபுரம், கள்ளபட்டி உள்ளிட்ட கிராமங்களையும், கிராமத்து மக்களையும் உள்ளடக்கி இவ்விரண்டு ஏடிஎம் இயந்திரங்கள் உள்ளன.
இயந்திரத்தை நம்பி வாழும் இக்கணினியுக காலகட்டத்தில் அடிக்கடி செயல்படாத, இவ்விரண்டு ஏடிஎம் இயந்திரத்திரங்களினால் பள்ளி,கல்லூரி செல்லும் மாணாக்கர்கள்,அரசு மற்றும் தனியார் துறை அலுவலர்கள், இளைஞர்கள், முதியோர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
செயல்படாத ஏடிஎம் இயந்திரம் குறித்து அப்பகுதி இளைஞர்களிடத்தில் கேட்ட போது,பத்து கிராமங்களையும், கிராமத்து மக்களையும் உள்வாங்கி மையப் பகுதியில் அமைந்துள்ள இவ்விரண்டு ஏடிஎம் இயந்திரங்களும் அடிக்கடி பழுது ஏற்படுவதாலும், ஏற்படும் பழுதை சரி செய்ய நிர்வாகங்கள் காட்டும் அலட்சியத்தினாலும் பண பரிவர்த்தனைகளில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதோடு கால விரயம், அலைச்சல்,மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகிறோம் என ஆதங்கத்துடன் குற்றம் சாட்டி வருகின்றார்கள்.
அடிக்கடி பழுதாகும் ஏடிஎம் இயந்திரம் குறித்து வங்கி நிர்வாகத்திடம் கேட்டபோது, கிராமத்தார்கள் பயன்படுத்த தெரியாமல் பழுதா(க்)கி விடுகிறார்கள் அதனால் அடிக்கடி பழுது ஏற்படுவதாக வங்கி நிர்வாகம் ஏளனமாக பதில் தொடுத்து வருவதாக தெரிகிறது.
இது குறித்து அப்பகுதி வாழ் சமூக நல பற்றாளர் ஒருவரிடத்தில் கேட்ட போது,அடிக்கடி பழுதாகும் ஏடிஎம் இயந்திரங்களினால் ரூ.10,20 செலவானாலும் கூட பரவாயில்லை என ரூ.ஆயிரத்துக்கு 20 முதல் 30 வரை கமிஷன் செலுத்தி தனியார் கணினி மையங்களில் வரிசையில் காத்து கிடக்கும் அவல நிலைக்கு உள்ளாகி வருகின்றனர்.ஏடிஎம் இருந்தும், இல்லா நிலையில் இருப்பதால் தற்சமயம் வரை சில கணினி மையங்கள் தான் அப்பகுதி மக்களை ஏடிஎம்-கள் பழுது,பணம் இல்லாத குறையை நிவர்த்தி செய்து வருகின்றன.
ஏடிஎம் இயந்திரங்களில் ஏற்படும் பழுதை சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் வங்கி மற்றும் ஏடிஎம் நிர்வாகங்கள் கிராமத்து ஏடிஎம் தானே என மெத்தனமாக இருந்து வருவதோடு இயந்திரங்களை பொம்மை பெட்டி போல காட்சி பொருளாக வைத்து வருவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையானது இனியும் நீடிக்குமாயின் சம்பந்தபட்ட ஏடிஎம்-கள் முன்பு சில சமூக நலன் சார்ந்த அமைப்புகள் போராட்ட களம் காண தூண்ட வேண்டாமெனவும் உடனடியாக சரி செய்து எனி டைம் மணி என்பதற்கேற்றார் போல 24 மணி நேரமும் தங்கு தடையில்லாமல் செயல்படுத்த வேண்டுமென ஏடிஎம் நிர்வாகத்தினருக்கு எதிராக சமூக அமைப்பினர் ஆதங்கத்துடன் தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அதுசமயம்,அடிக்கடி கோமா நிலைக்குச் சென்று செயல்படாமல்,காட்சி பொருளாக இருந்து வரும் இயந்திரங்களை அப்புறபடுத்திவிட்டு காமாட்சிபுரம் ஊராட்சியில் மாற்று வங்கி நிர்வாக ஏடிஎம் இயந்திரங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் ஊராட்சியில் இவ்விரண்டு ஏடிஎம் இயந்திரங்களையும் உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென காமாட்சிபுரம் ஊராட்சி மன்றத் தலைவருக்கு சுற்று வட்டார கிராமத்து பொதுமக்கள் குறிப்பாக, இளைஞர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.