தீராத பிணி தீர்க்கும் திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயம் – ஆலயம் அறிவோம்.


d12807a8e117dd69e993c99cf7e5bfe8

கருமாரியம்மன் என்ற சொல்லுக்கு  கருமையான மழை மேகத்தை போன்று அருளை வாரி வழங்கும் அம்மன் என்று பொருள். மாரி’என்றால் மழை என்று அர்த்தமாகும். ‘

கருமாரி  என்ற பெயரில் இருக்கும்

க – கலைமகள்;
ரு – ருத்ரி; 
மா – திருமகள்; 
ரி – ரீங்காரி (நாத வடிவானவள்) என ஒவ்வொரு எழுத்துக்கும் அர்த்தம் சொல்வர். இந்த நான்கு தெய்வங்களின் அம்சமானவள்ன்னும் சொல்லலாம்.

கருமாரியம்மன் எழுந்தருளும் திருவேற்காடு தலம் பற்றி இன்று பார்க்கலாம்…

0e3ffa0d42e09791c90c7bc05bbad7db

முன்பொரு காலத்தில் சிவபெருமான் சில நாட்களுக்கு கைலாயத்தை விட்டு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது, தான் செய்து வந்த படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல்,அருளல் என ஐந்து தொழிலையும் அன்னையிடம் ஒப்படைத்து சென்றார். ஐயனின் ஆணைப்படி அம்மையும் அகத்தியரிடம் தாம் எழுந்தருள  தகுந்த இடம் வேண்டும் என கேட்க வேற்கண்ணி அருகில் வந்து இதுதான் சரியான இடம் என வேற்காட்டை சுட்டிக்காட்ட அவ்விடத்திலேயே தேவி ஏழு சக்திகளாகி 1. அந்தரக்கன்னி, 2. ஆகாயக்கன்னி, 3. பிரமணக்கன்னி, 4. காமாட்சி, 5. மீனாட்சி, 6.விசாலாட்சி, 7.கருமாரி செங்கோல் ஏந்தி காட்சி தந்தாள். இதில் கருமாரி திருவேற்காட்டில் கோயில் கொண்டு இரு உருவாய் ஆட்சி செய்தாள். பிறகு ஆறு சக்திகளும் அவரவர் இடம் சென்றனர்.  வெள்வேல மரங்கள் இவ்விடத்தில் அதிகமிருந்ததால் வேற்காடு எனப்பெயர் வந்தது. நான் மறைகளே வெள்வேல மரங்களாகி நின்றதாக சொல்லப்படுவதுண்டு. 

e9fd9f2316dbdf3ce8b0a453116ea96b

பராசக்தியின் அம்சமான  கருமாரி இரண்டு உருவம் கொண்டாள். முதல் உருவம் பிரகாசத்துடன் இருந்தது.இரண்டாவது உருவம் நீலநிறத்துடன் பெரிய உருவாக நின்றது. நீல நிற உருவத்துடன் மகாவிஷ்ணுக்கு காட்சி தந்தாள். இக்காட்சியை அகத்தியர் கண்டு போற்றினார். அப்போது அம்மன் அகத்தியரைப் பார்த்து அகத்தியரே! நான் உலக மக்களை காப்பதற்காக பாம்பு உருக்கொண்டு புற்றில் அமர்ந்து பல காலங்கள் அருளாட்சி செய்வேன், கலியுகத்தில் இப்போது இருக்கும் உருவத்துடன் திருக்கோயில் பெற்று விளங்குவேன் என்று கருநாக வடிவம் எடுத்தாள். இவ்வாறு கருநாக வடிவம் எடுத்து அமர்ந்த புற்று இன்றும் இத்திருக்கோயிலின் அருகே உள்ளது.

இச்சா சக்தி , ஞான சக்தி, கிரியா சக்திகளை அருளி நம்மை காப்பவள். இவள்  சாந்த சொரூபிணியாக சுயம்புவாய் திருவேற்காட்டில் எழுந்தருளியுள்ளாள். சுயம்பு மூர்த்தத்துக்கு  பின்பு இருக்கும் அம்மன் கத்தி, சூலம், டமருகம், கபாலம் ஏந்தி காண்பவரை மெய்சிலிர்க்கச் செய்யும்படி காட்சி தருகிறாள். பிராகாரத்தில் இருக்கும் உற்சவ அம்மன் ஊஞ்சலில் அழகுடன் காட்சி தருகிறாள். மேலும் இங்குள்ள மரச்சிலை அம்மன் சிறப்பானவள். இவளுக்கு ரூபாய் நோட்டு மாலையாக அணிவிக்கப்படுகிறது. இவளை வேண்டினால் செல்வவளம் பெருகும் என்பது நம்பிக்கை.

மேலும் கோவில் பிரகாரத்தில் அரச மர விநாயகர், வள்ளி தெய்வயானை சமேத முருகர், பிரத்யங்கரா தேவி, நவகிரகம், சீனிவாச பெருமாள், ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி, காயத்ரி, மஹாலக்ஷ்மி, அங்காளம்மன், சாவித்ரி, துர்கை, ராஜராஜேஸ்வரி எனப் பல தெய்வங்களின் சந்நிதிகள் இந்த ஆலயத்தில் அமைந்துள்ளன.

de54e75a9c322a21a14884095e4d7cad

 திருமண வரம், குழந்தை வரம், வியாபார வளர்ச்சி, உடல் ஆரோக்கியம் என பல்வேறு வேண்டுதல்களோடு வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரம் அருளுபவள். இங்கு அம்மனுக்கு சாற்றப்படும் வேப்பிலை சகல நோய்களையும் தீர்க்கும் என்பதால் பக்தர்கள், நம்பிக்கையோடும், பயபக்தியோடும் வாங்கி செல்கின்றனர்.  ராகு கேது தோஷமுள்ளவர்கள் இங்கிருக்கும் புற்றுக்கு பால் வார்த்து வணங்கினால் தோஷம் நீங்கும் என்பதும் ஐதீகம்.

திருவிளக்கு பூஜை, வேப்பஞ்சேலை அணிதல், முடிகாணிக்கை, தேர் இழுத்தல், குங்கும அபிஷேகம், உப்பு காணிக்கை, மாலை அணிவித்தல், சங்காபிஷேகம், கலசாபிஷேகம், கல்யாண உற்ஸவம், பொங்கல் வைத்தல், அக்கினி சட்டி எடுத்தல், அங்கபிரதட்சணம், கண்மலர் சாற்றுதல், வெள்ளிக்காணிக்கை என பலவகைகளில் தங்கள் நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்துகின்றனர். அதிகப்படியான வருமானத்தை அரசாங்கத்திற்கு ஈட்டித்தரும் கோவில்களில் இதுவும் ஒன்று.

d6786059a855a84958b234b71a4cb36d

இந்த தலத்தின் அம்மனுக்கான விசேஷ நாளாக ஞாயிற்றுக்கிழமை பின்பற்றப்பட்டு வருகிறது. அந்நாளில் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை தந்து தங்கியும் செல்கின்றனர். இங்கு மிகப்பெரிய நாகப் புற்று உள்ளது. புற்றில் பாலூற்றி வழிபடுவோர்க்கு வாழ்வு அளித்து இராகு கேது போன்ற கிரகங்களால் வரும் தோஷங்களை நீக்குவேன் என்பது அன்னையின் அருள் வாக்கு.  பூட்டுகளை கொண்டு வந்து சந்நிதி முன்பாக பூட்டி தொங்க விட்டுச் செல்வது வழக்கமாக உள்ளது. இப்படிச் செய்வதால் தங்கள் பிரச்சினைகள் தீர்வதாக நம்பப்படுகிறது.

பௌர்ணமி, செவ்வாய் வெள்ளி கிழமைகளில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு. திருவேற்காடு தேவராம் என்ற பாடலில் ஞானசம்பந்தர் வேற்காட்டு தலத்தைப் பற்றி பாடியுள்ளார். அருணகிரிநாதரும் இத்தலம் குறித்து தனது பாடல்களில் பாடியுள்ளது சிறப்பு.

 
தேவி கருமாரியம்மனை தொழுவோம்!! ஓம் சக்தி!!
 

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews