பொதுவாகவே நடிகர்கள் யாராக இருந்தாலும் புதிதாக ஒரு படத்தில் நடிக்க விரும்பினால் அந்த படத்தின் கதையை முழுவதும் கேட்டுவிட்டு தன் கேரக்டர் எப்படி உள்ளது என்பதை பார்த்த பின்னரே அந்த கதையில் நடிக்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்வார்கள். ஆனால் அவர்கள் கதை கேட்பதற்கு அதிக நேரம் எடுத்து கொள்வதில்லை.
ஒரு சில நடிகர்கள் மட்டுமே படத்தின் முழு கதையையும் கேட்பார்கள். சிலர் தன் கேரக்டரை மட்டும் கேட்டுவிட்டு ஓகே கூறி விடுவார்கள். ஆனால் ஒரு வில்லன் நடிகர் படத்தின் கதையை மட்டும் சுமார் 10 மணி நேரம் கேட்டுள்ளாராம். உங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளதல்லவா. ஆமாங்க கோலிவுட்டே ஆச்சரியத்தில் தான் உள்ளது.
அந்த நடிகர் வேறு யாருமல்ல சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற மாநாடு படத்தில் வில்லனாக நடித்து மிரட்டிய எஸ்.ஜே.சூர்யா தான். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருந்து தற்போது நடிகராக வலம் வரும் எஸ்.ஜே.சூர்யாவிற்கு மாநாடு படம் நல்ல பெயரை பெற்று தந்துள்ளது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருக்கு பல படங்களில் வில்லனாக நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். ஆனால் அவர் கதைகளை மிகவும் கவனமாக தேர்வு செய்து வருகிறாராம். அந்த வகையில் எஸ்.ஜே.சூர்யா அடுத்ததாக இயக்குனர் ஆதிக் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகும் மார்க் ஆண்டனி என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
சமீபத்தில் கூட எஸ்.ஜே.சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில், “எல்லா நல்ல கதையும் என்கிட்டே வருது. மேலும், இது மாநாடு 2 என சொல்லலாம்” என்று மார்க் ஆண்டனி படம் குறித்து பதிவு செய்திருந்தார். இந்நிலையில், எஸ்.ஜே.சூர்யா மார்க் ஆண்டனி படத்தின் முதல் பாதி கதையை மட்டும் சுமார் 10 மணி நேரம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதி கதைக்கே 10 மணி நேரமா என ரசிகர்கள் மட்டுமல்ல சக நடிகர்களும் வாயை பிளந்து வருகிறார்கள்.