கடுமையான நடவடிக்கை பாயும்.. எடப்பாடி பழனிசாமியை எச்சரித்த சபாநாயகர்!

கலகம் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் அதிமுகவினர் செயல்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2022-23ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கி மே 10ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், இந்த ஆண்டுக்கான 2வது சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், அக்டோபர் 20ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடரை நடத்துவது என முடிவானது.

இதனையடுத்து இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவையின் 2ம் நாள் கூட்டம் தொடங்கியது. நேற்று எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை புறக்கணித்த நிலையில், இன்று இரு தரப்பினரும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.

அவை தொடங்குவதற்கு முன்னதாகவே பேரவையில் சலசலப்பு நிலவுகிறது அவைக்குள் வந்தார் ஓ.பி.எஸ் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையில் அமர்ந்தார் ஓ.பி எஸ் ஐ பார்த்து முதல்வர் ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் சிரித்தனர். அதிமுக எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாததால் எடப்பாடி பழனிசாமிக்கு அருகிலேயே ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்தார். இதனால் அதிமுக உறுப்பினர்கள் இருக்கைகளில் அமராமல் அமளியில் ஈடுபட்டனர்.

அதிமுக உறுப்பினர்களை சமாதானம் செய்ய அவைத்தலைவர் அப்பாவு முற்பட்டார். ஆனால் அதிமுகவினர் தொடர்ந்து கூச்சல் எழுப்பியதால் நீங்கள் எல்லாம் கலகம் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டே வந்துள்ளீர்கள். அதனை நான் ஒருமுறையும் அனுமதிக்க மாட்டேன். இப்படியெல்லாம் செய்தால் கடுமையான நடவடிக்கை பாயும் என அதிமுகவினரை எச்சரித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment