இந்தியாவில் எதிர்பாராதவிதமாக ஒமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் ஒவ்வொரு மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அதன்படி ஒமைக்ரான் மிகவும் வேகமாக பரவி வருவதால் மருத்துவ கட்டமைப்புகளை அதிகரிக்க மாநிலத்துக்கு ஒன்றிய அரசு வலியுறுத்தியுள்ளது. தேவைப்பட்டால் அரசு மற்றும் தனியார் ஹோட்டல்களில் கொரோனா சிகிச்சை அளிக்கும் வசதிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒமைக்ரானால் பாதிக்கப்படுபவர்களில் அதிக நோயாளிகளுக்கு வீட்டு தனிமையே தேவை படலாம் என்றும் கூறியுள்ளது. விட்டு தனிமையில் இருப்பவர்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள், கட்டுப்பாட்டு அறைகள் அமைக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டம் மற்றும் உட்கோட்டம் அளவில் கட்டுப்பாட்டு மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.
கிராமப்புறங்களில் கொரோனா விகிதத்தை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளது. கொரோனா பாதித்தவர்கள் உடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தி கண்காணிக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் தனிமைப்படுத்த மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. கொரோனா சிகிச்சை மையங்களில் ஆக்சிசன், மருந்துகள், தேவையான அளவு இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பையும் முழுமையாக கண்காணிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.