பார்வையிழந்த கும்கி யானைக்கு மீண்டும் பார்வை கிடைத்தது…. ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்….!

காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும்போது அவற்றை மீண்டும் வனப்பகுதிக்குள் துரத்துவதற்கு பயன்படுத்தப்படும் யானைகளை கும்கி யானைகள் என்று அழைப்பார்கள். இவைகளும் காட்டு யானைகள் தான். காடுகளில் இருந்து பிடிக்கப்பட்டு வனத்துறையினரால் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட பின்னரே கும்கி யானையாக பயன்படுத்தப்படும்.

அந்த வகையில் நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ந்து வரும் கும்கி யானை தான் சேரன். கும்கி யானையான சேரனுக்கு பல ஆண்டுகளாகவே வலது கண்ணில் பார்வை இல்லாமல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் பாகன் யானையை தாக்கியதில் சேரனுக்கு இடது கண் பார்வையும் பறிபோனது.

இதனையடுத்து சேரனை தாங்கிய பாகன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர்கள் சேரனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த தொடர் சிகிச்சை காரணமாக சேரனுக்கு மீண்டும் இடது கண்ணில் பார்வை கிடைத்து விட்டது. இதனால் தனது அன்றாட பணிகளை மீண்டும் சேரன் செய்ய தொடங்கி விட்டது.

ஒரு பார்வை இல்லாத குழந்தைக்கு பார்வை கிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக துள்ளி குதிக்குமோ அதேபோல் சேரன் யானையும் நீண்ட நாட்களுக்கு பிறகு பார்வை கிடைத்த மகிழ்ச்சியில் அங்கும் இங்கும் துள்ளி குதித்து விளையாடி வருகிறதாம்.

மேலும் சேரனுக்கு பார்வை கிடைத்ததால் வன ஊழியர்கள் மட்டுமின்றி கால்நடை மருத்துவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். யானை தானே என்று அலட்சியம் காட்டாமல் போராடி தொடர்ந்து சிகிச்சை அளித்து இழந்த பார்வையை மீட்டு தந்த மருத்துவக்குழுவை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment