ஆக்கிரமிப்புகளை அகற்ற 10 நாட்கள் கெடு… உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருப்பூர் பல்லடம் சின்னக்குட்டை குளத்தின் ஆக்கிரமிப்புகளை 10 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா கரடிவாவி கிராமத்தை சேர்ந்த எஸ்.கார்த்திகேயன் தாக்கல் செய்துள்ள மனு, இன்று தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர், கடந்த 2017 முதல் மனுதாரர் குளத்தின் ஆக்கிரமிப்பை அகற்ற போராடுகிறார். ஆனால், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
அரசு தரப்பில், குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்துவருகிறது. பல ஏழை மக்கள் அந்த பகுதியில் குடியிருக்கிறார்கள். உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஏழைகள் குடியிருக்கிறார்கள், நீண்ட காலமாக குடியிருக்கிறார்கள் என்ற காரணங்களை ஏற்க முடியாது. மனுதாரர் குறிப்பிட்டுள்ள சின்னக்குட்டையில் உள்ள ஆக்கிரமிப்புகளை 10 நாட்களுக்குள் அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
