நாட்டில் முதல் முறையாக டிரைவிங் லைசென்ஸ் பெற்ற 3 அடி உயரம் உள்ள நபர்…..

நம்ம நாட்ல எல்லாத்துக்கும் ஒரு ரூல்ஸ் இருக்கு. அதிலும் சாலை மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் மிகவும் கடுமையாக இருக்கும். இவற்றை சரியாக பின்பற்றவில்லை என்றால் தண்டனை வழங்கப்படும். அந்த வகையில் டிரைவிங் லைசென்ஸ் அதாவது ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஒருவர் வாகனத்தை இயக்குவது சட்டப்படி குற்றம்.

ஆனால் இந்த டிரைவிங் லைசென்ஸ் அவ்வளவு எளிதில் கிடைத்து விடுவதில்லை. அந்த வகையில் 3 அடி மட்டுமே உயரம் கொண்ட ஒரு நபர் மிகவும் போராடி தனக்கான டிரைவிங் லைசென்ஸை பெற்ற சம்பவத்தை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.

ஹைதராபாத் தெலுங்கானாவை சேர்ந்தவர் தான் கட்டிபள்ளி ஷிவபால். 42 வயதாகும் ஷிவபால் வெறும் 3 அடி உயரம் மட்டுமே உள்ளார். இந்நிலையில் ஷிவபால் கடந்த 2000ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். பணிபுரிந்து கொண்டே 2004ஆம் ஆண்டு பட்டம் பெற்ற ஷிவபாலுக்கு கார் ஓட்ட வேண்டும் என்பது ஆசை.

ஆனால் ஷிவபால் கார் ஓட்டுவதற்கு உயரம் ஒரு தடையாக இருந்தது. இந்நிலையில், தான் உயரம் குறைவான ஒருவர் தனக்கு ஏற்றபடி காரை மாற்றியமைத்து கொள்வது குறித்து ஷிவபால் இணையத்தில் பார்த்து தெரிந்து கொண்டார். இதனையடுத்து புதிதாக கார் ஒன்றை வாங்கி தன் உயரத்திற்கு ஏற்ப அதில் சில மாற்றங்களை செய்து நண்பர்கள் உதவியுடன் கார் ஓட்ட பழகினார்.

ஆனால் சட்ட விதிகளின்படி குறிப்பிட்ட உயரம் இருந்தால் மட்டுமே லைசென்ஸ் பெற முடியும் என்பதால் ஷிவபாலால் டிரைவிங் லைசென்ஸ் பெற முடியவில்லை. பின்னர் போக்குவரத்து உயரதிகாரிகளை சந்தித்து பேசியதையடுத்து ஷிவபாலுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. நம் நாட்டிலேயே மிகவும் உயரம் குறைவான நபருக்கு லைசென்ஸ் வழங்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

லைசன்ஸ் பெற்ற ஷிவபால் தன்னை போல் உள்ளவர்களுக்கும், உடல் ஊனமுற்றோருக்கும் கார் ஓட்டப் பயிற்சி அளிக்கப்போவதாக கூறியுள்ளார். ஷிவபால் உயரத்தை ஒரு தடையாக நினைத்து முடங்கி இருந்தால் தற்போது அவரால் சாதித்திருக்க முடியாது. இவரை போன்றவர்களுக்கு தற்போது ஷிவபால் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment