சோசியல் மீடியாவில் எந்த அளவிற்கு நன்மைகள் உள்ளதோ அதைவிட அதிகமாக தீமைகளும் உள்ளது. நாளுக்கு நாள் சோசியல் மீடியா மூலம் நடக்கும் கலாச்சார சீர்கேடுகள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் பிரபல இயக்குனர் ஒருவர் இதை வன்மையாக கண்டித்துள்ளார். மேலும் இதுகுறித்து மிகவும் காட்டமாகவும் பேசியுள்ளார்.
அந்த இயக்குனர் வேறு யாருமல்ல தமிழ் சினிமாவில் திருப்பாச்சி, திருப்பதி, பழனி போன்ற ஊர் பெயர்களில் பல படங்களை வழங்கிய இயக்குனர் பேரரசு தான். சமீபத்தில் ரெயின்போ புரொடெக்ஷன்ஸ் சார்பாக வரதராஜ் இயக்கி தயாரித்திருக்கும் பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே என்ற படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் பேரரசு பங்கேற்றிருந்தார். அப்போது பேசிய அவர், “டிக்டாக் மற்றும் ரீல்ஸ் போன்றவற்றால் நாட்டில் நடக்கும் கொடுமைகளை சகிக்க முடியவில்லை. மேலும் சில பெண்கள் கேவலமாக நடந்து கொள்கிறார்கள். குறிப்பாக ஒரு செயலியில் பெண்கள் இருவர் செய்யும் நடவடிக்கைகள் மிகவும் மோசமாக உள்ளது.
அவர்களைப் பிடித்து ஜெயிலில் தள்ள வேண்டும். நாட்டில் நடக்கும் கலாச்சார சீர்கேடுகளுக்கு செல்போன்கள் தான் முக்கிய காரணம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் செல்போனை கொடுக்கக்கூடாது. பெற்றோர்கள் அதனை கவனமுடன் நடக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
அவர் கூறுவதுபோல சிலர் இன்ஸ்டாகிரம் ரீல்ஸ் போன்றவற்றில் கவர்ச்சியாக நடனமாடுவது ஆபாச பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுபோன்ற வீடியோக்களை பார்க்கும் குழந்தைகள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள். எனவே இயக்குனர் பேரரசு கூறுவது போல இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.