சினிமா ஆசைக்கட்டி இளம் பெண்களை சீரழித்த போலி இயக்குநர்… ஆபாச ஆடியோ வைரல்!

சேலத்தில் சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி பல இளம் பெண்களை சீரழித்த வேலுசத்ரியன் என்ற போலி இயக்குனர், சினிமான்னா தப்பு, ரைட் எல்லாமே இருக்கும் என இளம் பெண்ணின் தாயிடம் பேசிய ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது…

சேலம் ஐந்து ரோடு அருகே ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் சினிமா கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்த இளம் பெண் கனகா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் எடப்பாடியை சேர்ந்த வேல்சத்ரியன் என்ற போலி சினிமா இயக்குனரும், அவருக்கு உறுதுணையாக இருந்த ராஜபாளையத்தைச் சேர்ந்த ஜெயஜோதி என்ற இளம் பெண்ணும் கைது செய்யப்பட்டு தற்போது சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே சினிமா இயக்குனர் என்று கூறிவந்த வேல்சத்ரியன், நடிகையாக வேண்டும் என்று ஆசையில் வந்த பல இளம் பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய தகவல் அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய வருகிறது.

இது குறித்து சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுப்புலட்சுமி தலைமையிலான போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் நேற்று ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள சினிமா கம்பெனியில் சோதனை மேற்கொண்டு அங்கிருந்த கம்ப்யூட்டர், ஹார்ட் டிஸ்க், லேப்டாப் உள்ளிட்டவைகளை கைப்பற்றி, பார்த்த போது அதில் இளம் பெண்களை ஆபாசமாக படம் எடுத்தது தெரியவந்துள்ளது .

” நோ ” என்ற தலைப்பில் சினிமா எடுப்பதாக விளம்பரப்படுத்தி, அதற்கான நடிகைகள் தேர்வு என்று கூறி ஏராளமான இளம் பெண்களை வரவழைத்து பல்வேறு கோணங்களில் வேல்சத்ரியன் ஆபாசமாக படம் எடுத்திருப்பதும், ஆடைகள் இல்லாமல் நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து இருப்பதும் தெரியவந்துள்ளது. சேலம், கோவை, திருப்பூர், கள்ளக்குறிச்சி, சென்னை என பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து, இளம் பெண்கள் இந்த போலி இயக்குனர் வேல் சத்ரியனிடம் ஏமாந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே இளம் பெண் ஒருவரின் தாயாருடன் வேல்சத்ரியன் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் வேல்சத்திரியன் அந்த இளம் பெண்ணின் தாயாரிடம் பேசும் போது, சினிமா என்றால் தப்போ.. ரைட்டோ.. எல்லாமே நடக்கத்தான் செய்யும், நான் உங்கள் மகளை நடிகையாக்குவேன்.

எனவே அவரை நான் டச் பண்ணுவேன், கிஸ் பண்ணுவேன், தொடுவேன், புடிப்பேன் எல்லாமே பண்ணுவேன் எனவே இதில் பிரச்சனை செய்யக்கூடாது என்று கூறுகிறார். அதற்கு அந்த இளம் பெண்ணின் தாயார் சரிங்க சார் ..சரிங்க சார்.. என சம்மதிப்பதோடு, நான் மொத்தத்துல உங்ககிட்ட ஒப்படைச்சிட்டேன்.. எல்லாத்துக்கும் ரெடி பண்ணி , அவள பெரிய இடத்துல கொண்டு வந்துருங்க .. எனக்கு அதுதான் முக்கியம். ஏன்னா நான் ரொம்ப கஷ்டப்பட்டு வந்துள்ளேன் சார்.. உங்க இரண்டு பேரோட இருக்கட்டும் சார்.. நீங்க ரெடி பண்ணுங்க என்று கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே போலி இயக்குனர் வேல் சத்ரியன் மீது அடுத்தடுத்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளதால், அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.. சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி பல பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய இளைஞர் வேல்சத்ரியன் குறித்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment