வனவிலங்குகள் மற்றும் பறவைகளை கூண்டில் அடைத்து வளர்ப்பது சட்டப்படி குற்றமாகும். ஆனால் உயிரினங்களின் பாதுகாப்பு கருதியும், அழிந்து வரும் உயிரினங்களை காப்பாற்றும் வகையிலும் அவற்றை உயிரியல் பூங்கா அல்லது மிருகக்காட்சி சாலை போன்ற இடங்களில் பாதுகாப்பாக பராமரித்து வருகிறார்கள்.
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே அமைந்துள்ள உதயகிரி கோட்டையில் பல்லுயிரின பூங்கா ஒன்று செயல்பட்டு வருகிறது. முழுக்க முழுக்க தமிழக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த பூங்காவில் மான்கள், மயில்கள், வண்ணத்துப் பூச்சிகள், குரங்குகள் என பல வகையான வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த பூங்காவில் அரிய வகையை சார்ந்த “சினேரியஸ் கழுகு” எனப்படும் பிணம் தின்னி கழுகு ஒன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது. மத்திய ஆசிய பகுதியை தாயகமாக கொண்ட இந்த கழுகு இந்தியாவில் அரிய வகை கழுகாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவை பொறுத்தவரை இந்த வகை கழுகுகள் வட மாநிலங்களில் மட்டுமே அதிகம் காணப்படுமாம்.
இந்த கழுகானது 2017ஆம் ஏற்பட்ட ஒக்கி புயலின் போது பாதை மாறி தமிழகத்தில் நுழைந்துள்ளது. உடலில் காயங்கள் இருந்ததால் கழுகால் பறக்க முடியாமல் இருந்துள்ளது. உடனே பொதுமக்கள் அளித்த தகவலையடுத்து கழுகை மீட்ட வனத்துறையினர் உதயகிரி கோட்டைக்கு கொண்டு சென்று ஒக்கி புயலின் அடையாளமாக “ஓகி” என பெயர் சூட்டி கூண்டில் அடைத்து பராமரித்து வருகிறார்கள்.
தற்போது கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. கழுகும் குணமடைந்து பறக்கும் நிலையில் ஆரோக்கியமாக உள்ளது. இந்நிலையில் அரிய வகை கழுகை கூண்டில் அடைத்து சிறைப்படுத்தக்கூடாது என்றும், அதை உடனடியாக விடுவித்து வனப்பகுதியில் விட வேண்டும் எனவும் வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்கள் கோரிக்கை நிறைவேறுமா? 4 ஆண்டுகளாக சுதந்திர காற்றை சுவாசிக்க காத்திருக்கும் கழுகின் ஆசையை அரசு நிறைவேற்றுமா? என்பது தெரியவில்லை.