இன்னும் 44 அமாவாசைக்குள் திமுக ஆட்சி காலி… ஜோசியம் சொல்லும் ஈபிஎஸ்

அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா  பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆட்டையாம்பட்டி பேருந்து நிலையம் அருகே இன்று இரவு நடைபெற்றது. இதில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது பேசிய அவர்,  பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை நடத்த தகுதியான இயக்கம் அதிமுக மட்டும்தான். ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்றார் அண்ணா. அவர் எதிலெல்லாம் அக்கறை செலுத்தினாரோ அந்த வழியில் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம் கொண்டு வந்து சிறப்பாக நடத்தினார். எம்.ஜி.ஆர் செய்த சாதனைகள், நன்மைகளை ஜெயலலிதா நிறைவேற்றினார். நம்முடைய தலைவர்கள் மக்களுக்காக உழைத்தவர்கள்.

உயிரோட்டமுள்ள திட்டங்களின் மூலம் மறைவிற்கு பின்னரும் மக்களின் மனதில் முப்பெரும் தலைவர்களும் வாழ்ந்து வருகிறார்கள். அதனால்தான் மக்கள் இயக்கமாக அதிமுக நீடிக்கிறது. அவர்களுக்கு குடும்பம் இல்லை. குடும்பத்திற்காக அவர்கள் உழைக்கவில்லை. மக்களையே  குடும்பமாக நினைத்து  வாழ்ந்தவர்கள் இந்த தலைவர்கள். இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ இந்த முப்பெரும் தலைவர்கள் தான் காரணம். முன்ணணி மாநிலமாக திகழ அடித்தளமிட்ட,  இவர்கள் உழைப்பால் தமிழ்நாடு ஏற்றம் கண்டது.

அதிமுகவை பொருத்தவரை சாதாரண மக்கள் நிறைந்த கட்சி. ஏழை எளிய நடுத்தர குடும்பங்கள் பாடுபட உழைத்த கட்சி அதிமுக. உயிரோட்டமுள்ள கட்சி. நிறைய பேர் பொறாமைப்படுகிறார்கள். எத்தனை முறை உடைந்தாலும் இந்தக் கட்சியை எதுவும் செய்ய முடியவில்லை என்று நினைக்கிறார்கள். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு கட்சி காணாமல் போய்விடும் என  நினைத்தனர். இதை முறியடித்து 1991-ல் மீண்டும் அதிமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்தார் ஜெயலலிதா. ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக ஆட்சியை அகற்ற நினைத்தனர். ஆனால்  நான்கரை ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை நான் நடத்தினேன்.

முதலமைச்சராக நான் இருந்தபோது, அதிகமான போராட்டங்களை சந்தித்தேன். யார் போராட்டம் நடத்தினாலும் அனுமதி வழங்கினோம். ஆனால் இப்போது அப்படி இல்லை. தற்போது அதிமுக நடத்திய ஒரு போராட்டத்திற்கே திமுக ஆட்சி பயந்து விட்டது. கடந்த 10 ஆண்டுகாலமாக அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார்கள் .

2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளித்த  அனைத்து வாக்குறுதிகளையும் ஜெயலலிதா முழுமையாக நிறைவேற்றினார். அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவ-மாணவியருக்கு  வழங்கப்பட்ட மடிக்கணினி திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது. மாணவர்களின் திறமையை வெளிக்கொணர வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அதிமுக ஆட்சியில் 52 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது. இந்தியாவில் எந்த மாநில  ஆட்சியிலும் இந்த அளவிற்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்ட வரலாறு இல்லை. எனவே அண்ணா பிறந்தநாள் விழா கூட்டம் மூலமாக இந்த திட்டத்தை தொடர வேண்டும் என முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தாலும், சேலத்தில் அதிமுகதான் ஆட்சியில் இருக்கிறது. மொத்தமுள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். சேலத்திற்கு ஒரு அமைச்சர் போட்டிருக்கிறார்கள். அவர்  எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. இன்னும்  44 அமாவாசைகள் தான் திமுக ஆட்சிக்கு உள்ளது.

அதுகூட நடக்காது. 2024-ல் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடக்க வாய்ப்பிருக்கிறது என்ற அவர்,  திமுக ஆட்சியில் 4 முதலமைச்சர்கள் என்று நான் சொன்னதற்கு,  நிறைய முதலமைச்சர்கள் இருக்கிறார்கள் என ஸ்டாலின் சொல்கிறார். 4 முதலமைச்சருக்கே நாடு தாங்கவில்லை. இன்னும் நிறைய பேர் என்றால் நாமெல்லாம் வெளிநாட்டிற்குத்தான் செல்ல வேண்டும் என்று விமர்சித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment