ஒரு பொய்யான செய்தியால் 1000 கோடி நஷ்டம்…. புலம்பும் இயக்குனர்…..!

திரையுலகில் நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் நடிகைகள் குறித்து பொய்யான செய்திகள் மற்றும் வதந்திகள் வெளிவருவது சாதாரண விஷயம் தான். சில செய்திகள் அவ்வளவு பெரிதாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் சில செய்திகள் கொஞ்சம் சீரியஸாக பேசப்படும். அப்படி ஒரு பொய் செய்தியால் ஒரு இளம் இயக்குனர் புலம்பி வருகிறார்.

அல்போன்ஸ் புத்திரன்

கடந்த 2015ஆம் ஆண்டு, மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மொழி வேறுபாடு இல்லாமல் அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது. அனைத்து மொழி ரசிகர்களும் இப்படத்தை விரும்பினார்கள். இப்படத்தில் நிவின் பாலி, மடோனா செபாஸ்டியன், சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படத்தை பிரபல இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கி இருந்தார். இப்படி ஒரு ஹிட் படத்தை கொடுத்த அல்போன்ஸ் புத்திரன் அதற்கு பின்னர் கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்தவொரு புதிய படத்தின் அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இதுகுறித்து அவருடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “2015ஆம் ஆண்டு பிரேமம் ரிலீஸுக்கு பின்னர் ஒரு இயக்குனராக நான் ரஜினி சாரை வைத்து படம் எடுக்க வேண்டும் என நினைத்தேன்.99% இயக்குனர்களுக்கு அந்த ஆசை இருக்கும். ஒருநாள் ஒரு ஆன்லைன் இணையப்பக்கத்தில் செய்தி ஒன்று வந்தது.

இயக்குனர் அல்போன்ஸுக்கு ரஜினியை இயக்க விருப்பம் இல்லை என்ற செய்தி அது. அந்த செய்தி காட்டுத்தீயாய் பரவியது. அந்த செய்தி குறித்து சவுந்தர்யா ரஜினிகாந்த் எனக்கு மெசேஜ் செய்தார். அப்படியான எந்த தகவலையும், எந்த நேர்காணலையும் நான் கொடுக்கவில்லை என்று சொன்னேன். இது குறித்து புரிந்துகொண்ட அவர் ரஜினி சாரிடமும் தெரிவித்துள்ளார்.

அந்த பிரச்னை அப்போது முடிவுக்கு வந்தது. ஆனால் தற்போது வரை அது என்னை தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. 2015 முதல் இந்த நொடி வரை அந்த பொய் செய்தி என்னை தொல்லை கொடுக்கிறது. அந்த ரஜினி படம் மட்டும் உருவாகி இருந்தால் கண்டிப்பாக ரூ.1000 கோடி வசூல் செய்திருக்கும். அரசாங்கத்துக்கும் வரி மூலம் லாபம் கிடைத்திருக்கும். இது எனக்கும், அரசாங்கத்துக்கும், சூப்பர் ஸ்டாருக்கும், ரசிகர்களுக்கும் ஒரு இழப்பு தான்” என குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment