பிரபல இசையமைப்பாளர், பாடகரான பப்பி லஹரி மறைவு-குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் இரங்கல்!
சில நாட்களாகவே இசை உலகில் பெரும் துயரம் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது. ஏனென்றால் இசை ஜாம்பவான்கள் பலரும் வரிசையாக காலமாகி கொண்டுவருகிறார்கள். குறிப்பாக கடந்த வாரம் லதா மங்கேஷ்கர் உயிரிழந்தார்.
இந்த நிலையில் தற்போது அமைப்பாளர் பப்பி லஹரி உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பிரபல இந்தி திரைப்பட இசையமைப்பாளர் பப்பி லஹரி உடல்நலக்குறைவின் காரணமாக மும்பையில் காலமானார். அவருக்கு வயது 69 ஆகும். 1973 ஆம் ஆண்டு நன்ஹா சிகாரி என்ற இந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
பப்பி லஹரி இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழில் 1985ஆம் ஆண்டு வெளியான பாடும் வானம்பாடி திரைப்படத்தின் மூலம் பிரபலமானார் பப்பி லஹரி.
பப்பி லஹரி மறைவுக்கு குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பப்பி லஹரி ஈடு இணையற்ற பாடகர் மற்றும் இசையமைப்பாளர் என்று குடியரசுத் தலைவர் புகழாரம் செய்துள்ளார்.
பப்பி லஹரியின் பாடல்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டுவிட் செய்துள்ளார். தலைமுறை தலைமுறையாக பப்பி லஹரியின் படைப்புகளை தொடர்புபடுத்த முடியும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். பப்பி லஹரியின் கலகலப்பான இயல்பை அனைவரும் தவற விடுவார்கள் அவரது மறைவு வருத்தம் அளிக்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்
