வரி ஏய்ப்பு வழக்கில் பிரபல நடிகருக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்….

தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என மிகவும் பிசியாக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் தற்போது வீரமே வாகை சூடும், மார்க் ஆண்டனி போன்ற படங்கள் உருவாகி வருகின்றன. இதுதவிர ஒரு சில புதிய படங்களிலும் விஷால் நடித்து வருகிறார்.

விஷால்

இந்நிலையில் நடிகர் விஷால் வரி ஏய்ப்பு வழக்கில் ஆஜராகாததால் நீதிமன்றம் அவருக்கு அபராதம் விதித்துள்ளது. திரைபிரபலங்கள் பலர் வருமான வரி உள்ளிட்ட பல வரிகளை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஷால் சுமார் 1 கோடி ரூபாய் வரை சேவை வரி செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

மேலும் வரி செலுத்தாததால் சேவை வரித்துறையினர் நடிகர் விஷாலை நேரில் ஆஜராக கூறி பலமுறை சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால், அவர் ஆஜராகாமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் சேவை வரிதுறை அதிகாரிகள் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் மீது வழக்கு தொடர்ந்தனர்.

இதனையடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையின்போது நடிகர் விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வழக்கு தொடர வேண்டிய அவசியம் இல்லை என வாதிட்டார். ஆனால் நீதிபதிகள் அவரின் வாதத்தை ஏற்க மறுத்தனர்.

ஆஜராக கூறி பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாதது தவறு என கூறிய நீதிபதிகள் நடிகர் விஷாலுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்ததோடு, வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டது மிகவும் கண்டனத்துக்குரியது என எச்சரித்துள்ளனர். முன்னணி நடிகரான விஷாலுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment