குண்டாக இருப்பதெல்லாம் ஒரு பிரச்சினையா.. உடல் பருமனைக் காரணம் காட்டி வேலையைவிட்டு தூக்கிய நிறுவனம்.
ஆஸ்திரேலியாவில் ஒரு நபர் குண்டாக இருப்பதாகக் கூறி வேலைக்கு சேர்ந்த சில மணி நேரத்தில் வேலையைவிட்டு நீக்கிய சம்பவம் நடந்துள்ளது.
அதாவது ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லேண்ட் என்ற பகுதியில் உள்ள ஸ்ட்ராஹன் என்ற கேளிக்கை விடுதியில் ஹமீஸ் கிரிஸ்பின் என்பவர் மேனேஜராகப் 4 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
இந்தநிலையில் இவருக்கு டாஸ்மானியாவில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் பணி கிடைக்கப் பெற்றுள்ளது.
குயின்ஸ்லேண்ட்டில் இருந்து டாஸ்மானியா ஏறக்குறைய 3000 கிமீ தொலைவு என்ற நிலையில் சம்பள உயர்வு காரணமாக அந்த விடுதியில் சேர ஒப்புக் கொண்டுள்ளார் ஹமீஸ்.
அதனைத் தொடர்ந்து வீட்டைக் காலி செய்துவிட்டு மனைவி மற்றும் மகனுடன் டாஸ்மானியாவில் வீடு எடுத்துத் தங்கியுள்ளார்.
மேலும் மறுநாள் காலை பணியில் சேர விடுதிக்குச் சென்றவரை, வேலைக்குச் சேர்ந்த சில மணி நேரத்திலேயே பணியை விட்டு நீக்கியுள்ளது நிர்வாகம்.
அதாவது ஹமீஸ் உடல் பருமன் அதிகமாக இருப்பதே வேலையைவிட்டு நீக்கப்படக் காரணம் என்று கூறப்படுகின்றது.
வேலைக்கான நேர்காணல் ஆன்லைனில் நடைபெற்றதை அடுத்து விடுதி உரிமையாளர் முதன்முறையாக நேரில் பார்த்து இவ்வளவு உடல் பருமன் கொண்டவர் இந்த வேலைக்குப் பொருத்தமானவர் கிடையாது என்று கூறினாராம்.
இதுகுறித்த செய்தியினை சமூக வலைதளத்தில் வீடியோவாகப் பதிவிட பொதுமக்கள் அவருக்கு தங்களது ஆதரவினைத் தெரிவித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
