ஃபிளாஷ்பேக் 2021: சின்ன கலைவாணர் உலகை விட்டு பிரிந்தார்…!

நடிகர் என்பதை தாண்டி ஒரு சிறந்த கலைஞராக தமிழ் சினிமாவில் ஜொலித்து கொண்டிருந்த நடிகர் விவேக் இந்தாண்டு ஏப்ரல் 17ஆம் தேதி திடீரென மரணமடைந்தார். அவரது மரணம் தமிழ் சினிமாவிற்கு பேரிடியாக இருந்தது. யாரும் எதிர்பாராத வகையில் திடீரென விவேக் மரணமடைந்தது ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விவேக்

படங்களில் காமெடி மட்டும் செய்யாமல் அதோடு கருத்தையும் சேர்த்து ஏதாவது மெசேஜ் சொல்லி கொண்டே இருப்பார் விவேக். தமிழ் சினிமா ஒரு உன்னதமான கலைஞனை இழந்து விட்டது. இந்த ஆண்டில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு என்றால் அது காமெடி நடிகர் விவேக்கின் மரணம் தான்.

விவேக்

ரசிகர்களால் சின்ன கலைவாணர் என அழைக்கப்படும் நடிகர் விவேக் சென்னை சாலிகிராமம் பத்மாவதி நகரில் உள்ள அவரது வீட்டில் பேசி கொண்டிருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்து எக்மோ கருவி பொருத்தி தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விவேக்

நடிகர் விவேக் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் கொரோனா தடுப்பூசி போட்டிருந்தார். அதனால் அவரது மரணம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. பின்னர் பிரேத பரிசோதனையில் அவரது மரணம் இயற்கையானது தான் தடுப்பூசி காரணம் இல்லை என தெரிய வந்தது.

விவேக்

59 வயதான விவேக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு போன்ற சமூக சேவை பணிகளில் ஆர்வம் காட்டி வந்தார். மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமின் கனவை நிறைவேற்றும் வகையில் கிரீன் கலாம் என்ற அமைப்பின் மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை இலக்காக வைத்து செயல்பட்டு வந்தார். தற்போது விவேக் விட்டு சென்ற பணியை அவரின் உதவியாளர் செல் முருகன் மேற்கொண்டு வருகிறார்.

நடிகர் விவேக் இந்த மண்ணை விட்டு பிரிந்தாலும் அவரின் நடிப்பு மூலமும் அவர் செய்த சேவைகள் மூலமும் என்றும் மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment